தர்மம் போதிக்கும் உபாக்யானங்கள்” – Mahabharata
- விகாரி வர்ஷம் மாசி Mar 2020
இந்த்ரத்யும்னன் என்ற அரசன் தான் செய்த புண்யங்களின் பலன் தீர்ந்து போகவே, ஸ்வர்க்கத்திலிருந்து மீண்டும் பூமிக்கு வந்தான். அவன் சிரஞ்சீவியான மார்க்கண்டேயரை சந்தித்து “நான் யார் என்று தெரிகிறதா?” என்றான். அவர் “தெரியாது” என்றார். அவன் “உங்களை விட நீண்ட நாள் வாழ்ந்தவர் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்க அவர் “ப்ராவாரகர்ணன் என்ற ஆந்தை ஹிமய மலையில் இருக்கிறது.அது எனக்கும் முன்னே பிறந்தது” என்றார். உடனே ஒரு குதிரையின் உருவத்தில் இந்த்ரத்யும்னன் அவரைச் சுமந்தபடி அங்கே சென்று அவ்வாந்தையிடம் “நான் யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டான். ஆந்தை சற்றே யோசித்து “தெரியாதே” என்றது. அதனிடமும் “உன்னை விட நீண்ட நாள் வாழ்ந்தவர் யாராவது இருக்கிறார்களா?” என்று வினவினான். ஆந்தை “நாடீஜங்கன் என்ற கொக்கு இந்த்ரத்யும்ன தடாகத்தில் இருக்கிறது என்றது. மார்க்கண்டேயரையும் ஆந்தையையும் உடன் அழைத்துக் கொண்டு அந்த தடாகத்திற்குச் சென்று கொக்கிடமும் அதே கேள்வியைக் கேட்டான். கொக்கும் “தெரியாது” என்று சொல்ல,
“உனக்கு முன்னர் வாழ்ந்த வேறேதாவது ப்ராணியைத் தெரியுமா?” என்று கேட்டான். நாடீஜங்கன் “இந்த குளத்திலேயே அகூபாரன் என்ற ஆமை இருக்கிறது. அதனிடம் கேட்போம்” என்றது. எல்லோரும் சேர்ந்து அந்த ஆமையிடம் சென்று “இந்த்ரத்யும்னன் என்ற அரசனை அறிவாயா?” என்று கேட்டனர். உடனே அந்த ஆமையானது சற்றே யோசித்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கி கைகூப்பியபடி பேச ஆரம்பித்தது. “இவனைத் தெரியாமல் போகுமா? யஜ்ஞத்திற்காக ஆயிரம் முறை
யூபஸ்தம்பத்தை ஸ்தாபனை செய்தவன். இவன் தக்ஷிணையாகக் கொடுத்த பல்லாயிரக்கணக்கான பசுக்களின் வரவால் இந்த இடமானது நான் வசிக்கும் இந்த குளமாக ஆயிற்று”. இவ்வாறு அவன் செய்த புண்யங்களை நினைவு கூர்ந்து ஒரு ப்ராணி சொன்னதும் ஆகாயத்திலிருந்து ஒரு அழகிய விமானம் வந்திறங்கி அவனை மீண்டும் ஸ்வர்க்கத்திற்கே இட்டுச் சென்றது.
நீதி: நாம் உயிருடன் உள்ளவரை புண்ய கார்யங்களை செய்யவேண்டும். அதுவே நமக்கு கணக்கில்லா ஶ்ரேயஸைக் கொடுக்கும்
14.விகாரி வர்ஷம் தை Feb 2020
மஹர்ஷி கௌதமருக்கு சிரகாரி என்ற மஹாஞானியான ஒரு புத்ரன் இருந்தான். அவன் எல்லாவற்றையும் நன்றாக யோசித்து நீண்ட நேரம் எடுத்துக் கொண்டபின்னரே செய்வான். இவ்வாறு செய்வதால் அவனை எல்லோரும் சிரகாரி என்ற பெயரிட்டு அழைத்தனர். ஒரு நாள் கௌதமர் தன் மனைவியின் மேல் அவள் செய்த தவறுக்காக மிகுந்த கோபம் கொண்டார். தன் மகனான சிரகாரியை அழைத்து “மகனே! பாவம் செய்த இவளை கொன்று விடு” என்று ஆஜ்ஞையிட்டு வேகமாக வெளியில் சென்று விட்டார். சிரகாரியும் தன் ஸ்வபாவத்திற்கேற்ப சிந்திக்கலானான்.
“தந்தையின் சொல்லைக் கேட்க வேண்டும்.ஆனால் தாயைக் கொல்வது பாவம். தாய் தந்தை என்ற இருவரும் தான் எனக்கு இந்த சரீரத்தை அளித்தார்கள். கர்மங்களைச் செய்து வைத்த அப்பா தான் முதல் குரு. அதே சமயம் சரீரம் என்ற அக்னிக்கு அம்மா தான் அரணியைப் போன்றவள். நூறு வயதானாலும் தாயின் முன் ஒருவன் குழந்தை தான். அம்மா தான் நமக்கு கோத்ரத்தை சொல்லித் தருபவள். அப்படிப்பட்ட அன்னையைக் கொல்வது எப்படி? மேலும் அபலையான ஸ்த்ரீயைக் கொல்வது மஹாபாபம் அல்லவா? மேலும் இந்த தவறு ஸ்திரீயுடையது அல்ல ஒரு புருஷன் செய்த தவறு தானே? இப்படி நம் தர்மத்திற்கு இக்கட்டான சூழல் வந்துவிட்டதே ” என்று நீண்ட நேரமாக விசாரம் செய்து கொண்டிருந்தான். இதற்குள் வெளியில் சென்ற கௌதமர் “அடடா நாம் மகனுக்கு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்து விட்டோமே! அவன் ஸ்வபாவத்தின் படி கொல்லாமல் இருந்திருந்தால் நாம் பெரும் பாவத்திலிருந்து தப்பிப்போம்” என்று சிந்தித்தவாறு அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார். அவரைக் கண்டவுடன் ஆயுதம் தாங்கிய சிரகாரி அவர் காலில் விழுந்து விட்டான். அருகில் பத்னீ உயிரோடு இருப்பதையும் கண்டு மிகவும் மகிழ்ந்தார். மகனை “சிரஞ்சீவியாக நீண்ட காலம் வாழ்வாய்” என்று ஆசீர்வதித்தார்.
நீதி: எந்த கார்யத்தைச் செய்யும் முன் நன்றாக விசாரம் செய்ய வேண்டும். தர்மம் அதர்மம் எது என்பதை ஆழ சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
13.விகாரி வர்ஷம் ஆடி ஜூலை 2019
ப்ரஹ்மதத்தன் என்ற ராஜா இருந்தான். அவனிடம் பூஜநீ என்ற பறவை இருந்தது. அவன் அதை அன்புடன் கவனித்து வந்தான். அந்த பறவைக்கு வரும் காலத்தை அறியும் திறன் இருந்தது. நாளடைவில் அந்த பூஜநீக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. ராஜாவும் அவ்வாறே ஒரு மகனைப் பெற்றெடுத்தான். அந்த பறவைக்குஞ்சும் ராஜகுமாரனும் அரண்மனையில் வளர்ந்து வந்தனர். தினந்தோறும் வெகுதூரம் பறந்து சென்று பூஜநீ இரண்டு பழங்களைக் கொண்டு வரும். ஒன்றைத் தன் குழந்தைக்குக் கொடுத்து விட்டு மற்றொன்றை ராஜகுமாரனுக்காகக் கொடுக்கும். அந்த பழங்கள் மிகவும் ருசியும் போஷாக்கும் உடையவை. அதன் மூலம் அந்த பறவையும் அரசகுமாரனும் நன்றாக புஷ்டியாய் வளர்ந்து வந்தனர். ஒரு நாள் இவ்வாறே பூஜநீ வெளியே சென்றிருக்கையில் அந்த ராஜகுமாரன் அங்கே இருந்த அதன் குஞ்சைக் கண்டான். அதை மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் எடுத்துச் சென்று அதைக் கொன்றுவிட்டான். இரண்டு பழங்களுடன் வந்த தாய்ப் பறவை நடந்ததை அறிந்தது. மிகவும் சோகவயப்பட்டது. அந்த ராஜகுமாரன் தான் இப்படிப்பட்ட த்ரோஹத்தை செய்திருக்கிறான் என்று அறிந்து அவன் இரண்டு கண்களையும் கொத்தி எடுத்து விட்டது. நடந்ததை அரசனும் அறிந்தான். அவனிடம் அந்த பறவையானது, “ராஜா நமக்குள் பகை உண்டாகிவிட்டது. நான் இனியும் இங்கே இருப்பது முறையன்று. நான் எங்கேயாவது செல்கிறேன” என்றது. ப்ரஹ்மதத்தன் “அவன் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்து விட்டாய். நீ எந்த தவறும் செய்யவில்லை. நமக்குள் பகை இல்லையே. அதனால் இங்கேயே இரு” என்று பலவாறு வற்புறுத்தினான். அந்த பறவை “கோபம் நட்பைக் கொன்றுவிடும். அவ்வாறு சாந்தம் அடைவதில்லை. இவ்வாறு செய்த த்ரோஹச் செயலால் ஒரு முறை முறிந்தது இனி ஒட்டாது. அதனால் நான் வேறிடம் செல்வதே நம் இருவருக்கும் நல்லது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விர்ரென்று பறந்து விட்டது.
நீதி: பகை ஏற்பட்ட பிறகு அவர்களிடம் நட்பு கொள்ளும் விஷயத்தில் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்
12.விகாரி வர்ஷம் ஆனி ஜூன் 2019
ஜாஜலி என்ற மஹரிஷி இருந்தார். அவர் மிக்க தபோபலம் கொண்டவர். அவர் இவ்வாறு கடுமையான ஒரு மரம் போல அசைவற்று நின்று தவம் செய்துக் கொண்டே இருந்தார். காலங்கள் மாறின. மழைக்காலம் வந்தது. ஒரு நாள் அவர் சடையில் இரண்டு பறவைகள் கூடு கட்டின. பறவைகள் மீது மிகவும் கருணை கொண்டு அவற்றை அங்கேயே தங்க அனுமதித்தார். சில நாள் கழித்து பெண் பறவை முட்டையிட்டது. அப்போதும் ஜாஜலி அசையாமல் நின்றுகொண்டிருந்தார். முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரித்தன. அப்போதும் அவர் நகராமல் அவற்றுக்கு மிகவும் அன்புடன் இடம் அளித்தார். குஞ்சுகள் வளர்ந்து கூட்டை விட்டு பறந்து செல்லத் தயாராகிவிட்டன. அவை பறப்பதைப் பார்த்த பறவைகள் மிகவும் சந்தோஷப்பட்டன. இன்னும் சில நாள் கழித்து எல்லா பறவைகளும் பறந்துவிட்டன. அப்போது தான் ஜாஜலி நகர்ந்தார். ஆனால் அவர் மனத்துக்குள் அஹம்காரம் தோன்ற ஆரம்பித்தது. நதிக்கரைக்குச் சென்று ஸந்த்யா தர்ப்பணம் செய்தார். தன் கைகளை மேலே உயர்த்தி பெருமையாக “நானே தர்மவான்” என்று உரக்கச் சொன்னார். அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி, “ஓ ஜாஜலி! நீ வாராணஸியில் வாழும் துலாதாரனுக்கு சமமாக மாட்டாய்” என்று சொன்னது. ஆச்சரியம் அடைந்த ஜாஜலி அங்கே சென்றார். துலாதாரன் ஒரு வியாபாரியாதலால் கடையில் இருந்தான். ஜாஜலியை வணங்கி வரவேற்று “தாங்கள் வந்த காரணத்தை அறிவேன்” என்றான். முனிவரும் “நீ அறிந்த தர்மத்தை தெரிவிப்பாயாக என்கிறார். துலாதாரன், “நான் ஒருவியாபாரி. நான் யாரையும் ஏமாற்றாமல் என்தொழிலை சுத்தமாக செய்கிறேன். எந்த பொருள் மீதும் எனக்கு துளியும் ஆசை இல்லை. இவ்வாறாக பற்று ஆசை தான் என்ற அஹங்காரம் இன்றி செய்யும் செயலே தர்மம். நம் உள்ளமே தீர்த்தம் அதை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் எந்த தீர்த்தமும் டாம்பீகச் செயலிலும் பயனில்லை. இதுவே ஆத்மயஜ்ஞம்” என்று சொல்லி பலவாறாக தர்மத்தைப் பற்றி எடுத்துரைத்தான். “அங்கே ஆகாயத்தில் பறக்கின்றனவே அவை தாம் நீங்கள் காத்த பறவைகள் அவற்றை இங்கே அழையுங்கள் அவற்றைக் கேளுங்கள்” என்றான். அவரும் அவ்வாறே செய்ய அந்த பறவைகளும் வந்து அவன் சொன்ன அஹிம்சையையும் மனத்தூய்மையையும் ஆமோதித்தன. இதற்குப் பிறகு தர்மத்தை உணர்ந்த ஜாஜலியும் துலாதாரனும் நல்ல கதியை அடைந்தார்கள்.
நீதி: அஹங்காரமின்றி உள்ளத்தூய்மையுடனும் செய்யும் செயலே தர்மம்
- விகாரி வர்ஷம் வைகாசி மே 2019
கௌதமன் என்ற ஒரு ஏழை ப்ராஹ்மணன் இருந்தான். அவனுக்கு வேதாத்யயனமும் இருக்கவில்லை வேலையும் இருக்கவில்லை. பணம் தேடி கால்போன போக்கில் நடந்தபடி ஒரு ஊருக்கு வந்தான். அவ்வூரில் எல்லோரும் கொள்ளைக்காரர்களும் வேடர்களுமாக இருந்தனர். அவன் ப்ராஹ்மணன் என்று அறிந்து அந்த ஊரிலேயே தங்க வைத்து, இருக்க இடமும் கொடுத்தனர். அவனும் வேட்டை ஆடுவதிலும் பக்ஷிகளை ஹிம்ஸிப்பதிலும் மனம் லயித்தவனாக மாம்ஸப்ரியனாகி விட்டான். ஒரு நாள் அந்த ஊருக்கு வேதாத்யயனம் செய்த அவன் நண்பன் வந்தான். ராக்ஷஸனைப் போல் தோற்றம் அளித்த கௌதமனுக்கு உபதேசம் செய்து “நீயும் என்னுடன் வந்து விடு” என்றான். கௌதமனும் அவனுடன் சென்றான். வழியில் சில மத யானைகள் துரத்த. எல்லோரும் ஓட காட்டுக்குள் வெகு தூரம் தனியே சென்றுவிட்டான் கௌதமன். அப்போது தேவலோக வ்ருக்ஷம் போல ரம்யமான ஒரு மரத்தையும் அதன் அடியில் ஒரு அழகான கொக்கையும் கண்டான். அந்த கொக்கு மனுஷ்ய குரலில் “என் பேர் ராஜதர்மன். நான் கஶ்யபரின் புதல்வன். நீ என் அதிதி” என்று கௌதமனை வரவேற்று உண்ண உணவைக் கொடுத்து சுசுருஷையும் செய்தது. மறுநாள் கௌதமன் தன் ஏழ்மையை மட்டும் தெரிவிக்க ராஜதர்மன் “வருந்தாதே. விரூபாக்ஷன் என்ற என் ஸ்நேஹிதனான ராக்ஷஸ அரசன் ஊரான மேருவஜ்ரம் இங்கிருந்து மூன்று யோஜனைக்கப்பால் இருக்கிறது. அங்கே போய் என் நண்பன் என்று அவனிடம் நீ சொன்னால் உனக்கு பொருள் உதவி செய்வான்” என்றது. கெளதமனும் அவ்வாறே செய்து ரத்னங்களைப் பெற்றான். தனத்துடன் நகரத்தை விட்டுத் திரும்புகையில் இரவில் வெகு நேரம் ஆனபடியால் அவனுக்கு மிகவும் பசித்தது. போகிற வழியில் ராஜதர்மனைக் கொன்று தின்று விடலாம் என்று நன்றி கெட்ட கொடிய திட்டம் தீட்டியபடி சென்றான். தன்னை அன்புடன் வரவேற்ற ராஜதர்மனைக் கொன்றான். அடுத்த நாள் தன் நண்பன் வராததால் விரூபாக்ஷன் சில ராக்ஷஸர்களை அனுப்பி விசாரித்து வரச் சொன்னான். அவர்களும் நடந்ததை அறிந்து கௌதமனைப் பிடித்துக் கொன்றனர். ராக்ஷஸர்களும் பறவைகளும் கூட நன்றிகெட்ட அவன் மாமிசத்தை சாப்பிட மறுத்தனர். விரூபாக்ஷன் தன் நண்பனான ராஜதர்மாவின் அந்திமக்ரியைகளைசெய்கையில் காமதேனுவும் இந்திரனும் அங்கே வந்து அந்த பறவையை மீண்டும் உயிர்பித்தனர். உயிர்த்து எழுந்த ராஜதர்மன் கௌதமனையும் உயிர்ப்பிக்குமாறு வேண்ட, அவனும் எழுந்தான். பிறகு அவரவர் வழி சென்றனர். கௌதமன் செல்வத்துடன் சில காலம் வாழ்ந்து, அதன் பிறகு தன் பாபத்தினாலும் நரகத்திற்குச் சென்றான்.
நீதி: செய்நன்றி மறத்தலுக்கு ப்ராயஶ்த்தமே கிடையாது
- விகாரி வர்ஷம் சித்திரை ஏப்ரல் 2019
மஹாபாரத யுத்தம் முடிந்திருந்த சமயம். யுதிஷ்டிரர் நாட்டின் சக்ரவர்த்தியானார். பாண்டவர்கள் தார்மிகமாக ஆண்டு பல யாக
யஜ்ஞாதிகள் செய்தனர். யுதிஷ்டிரர் தன் அரண்மனை வாசலில் ஒரு பெரிய பேரியைக் கட்டி வைத்திருந்தார். “என் நாட்டு மக்கள் யாருக்கேனும் ஏதேனும் குறை இருந்தால் இதை அடிக்கலாம். அவர்களுக்கு வேண்டியது அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு மனமகிழ்ந்த ஏழை ப்ராஹ்மணன் ஒருவன் மிகவும் ஆசையுடன் அங்கே வந்தான். அந்த பேரியை அடிக்க ஆரம்பித்தான். அப்போது தான் யுதிஷ்டிரர் உறங்கச் சென்றிருந்தார். சத்தம் கேட்டவுடன் தன் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கச் சொன்னார். அந்த ப்ராஹமணனுக்கு தனம் தேவை என்று அவர்கள் திரும்ப வந்து சொன்னார்கள். உறக்கத்தில் இருந்த ராஜா “நாளை காலையில் வரச்சொல்” என்று சொல்லி விட்டார்.
மிகவும் ஏமாற்றம் அடைந்த அந்த ப்ராஹ்மணன் உடனே பீமனிடம் விரைந்தார். பீமனோ இரவில் வெகு நேரமாகி விட்டது. நான் அணிந்திருக்கும் ஆபரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கழற்றிக் கொடுத்தான். அந்த ப்ராஹ்மணரும் திருப்தியாக ஊருக்குத் திரும்பிச் சென்றார்.
பீமன் உடனே யுதிஷ்டிரர் இருக்கும் இடத்திற்குச் சென்று அந்த முரசை அடிக்க ஆரம்பித்தான். காவலர்கள் பீமன் அடிக்கிறார் என்று அரசனிடம் வந்து சொன்னார்கள். என்ன விஷயம் என்று கேட்டு வரும்படி மீண்டும் பணித்தார். பீமன் “என் அண்ணா மஹாஞானி. நாளை வரை தான் உயிருடன் இருப்பார் என்று அறிந்தவர். அதனால் தான் அந்த ஏழை ப்ராஹ்மணரை மறுநாள் வரச்சொன்னார்” என்றார். இதைக் கேட்ட யுதிஷ்டிரர் தன் தவறை உணர்ந்தார். பீமனும் “அண்ணா என்னை மன்னித்து விடுங்கள். தர்மம் செய்வதில் தாமதிக்கக் கூடாது. அதை உணர்த்தத் தான் இப்படிச் செய்தேன்” என்றான்.
நீதி : “தர்மே விலம்போ ன கார்யா”
தர்மம் செய்கையில் தாமதம் செய்யக்கூடாது.
9.விலம்ப வர்ஷம் பங்குனி / March 2019
ஒரு ஊரில் கௌதமி என்ற வயதான ப்ராஹ்மண ஸ்த்ரீ இருந்தாள். அவளுடைய ஒரே மகனை பாம்பு ஒன்று கடித்ததால் அவன் உயிர் இழந்து விட்டான். அப்போது அர்ஜுனகன் என்ற வேடன் அந்த பாம்பை பிடித்துக் கொண்டு அவளிடம் வந்து, “அம்மா! இதோ பாருங்கள் இந்த பாம்பு தான் உங்கள் மகனைக் கொன்ற துஷ்ட ஜந்து! இதைக் கொன்றுவிடுகிறேன். உடனே சொல்லுங்கள் – நெருப்பில் போடட்டுமா இல்லை துண்டுதுண்டாக வெட்டி விடட்டுமா?” என்றான். அவள் “வேண்டாமப்பா இதை விட்டு விடு. இந்த உலகில் நடப்பது நடந்தே தீரும். இதைக் கொல்வதால் என் மகன் எனக்குத் திரும்பக்கிடைக்க மாட்டான்” என்றாள். “தாயே! நீங்கள் நல்லதையும் கெட்டதையும் அறிந்தவர். ஆனால் இந்த சர்ப்பம் செய்தது துஷ்டத்தனம். மேலும் அது உயிர் பிழைத்தால் இன்னும் பலருக்கு ஆபத்து” என்றான். அதற்கு கௌதமி, “ப்ராஹமணர்களுக்கு கோபம் என்பது கிடையாது. நாங்கள் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டோம். நீயும் இந்த பாம்பை மன்னித்து விட்டு விடு. ” என்றாள். வேடனும் மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தான். ஆனால் அந்த கௌதமியானவள் பழி வாங்க மறுத்து விட்டாள். இதற்கிடையில் அந்த பாம்பு மனிதக் குரலில் பேசத் துவங்கியது. “அய்யா மீண்டும் மீண்டும் என்னை துஷ்டன் என்கிறீரே! நானாக இதைச் செய்யவில்லை. ம்ருத்யுவால் ப்ரேரிக்கப்பட்டு தானே இதைச் செய்தேன். இதில் என்னுடையது என்ன தவறு. யஜ்ஞம்செய்யும்போது பலன் யஜமானனுக்குத் தானே செய்விப்பவருக்கு இல்லையே” என்றெல்லாம் வாதாடியது. அப்போது அங்கே ம்ருத்யு தோன்றி, “ஏ பாம்பே! நானாக இதைச் செய்யச் சொல்லவில்லை. நானே காலனால் ப்ரேரிக்கப்பட்டுத் தான் இதைச் செய்தேன். அதனால் நானும் காரணம் அல்ல காரியமே” என்றான். இவ்வாறு தர்மவிஷயமான சர்ச்சை போய்க்கொண்டிருந்த போது அங்கே காலன் வந்தான். “வேடனே இதில் நானோ ம்ருத்யுவோ அந்த ஸர்ப்பமோ குற்றமற்றவர்கள். அந்த சிறுவன் முன்னால் செய்த பூர்வஜன்ம கர்மாக்களின் பலனாகவே அவன் இறந்தான். மனிதர்களை அவர்கள் செய்த கர்மாக்களே பின்தொடர்ந்து வந்து உறுத்தும்” என்றான். இதைக் கேட்ட கௌதமி அந்த வேடனிடம் “அர்ஜுனகனே! இச்சிறுவன் இறந்தது அவன் முன்செய்த கர்மாவினால்தான் இப்போதாவதுஅந்த ஸர்ப்பத்தை விட்டுவிடு” என்றாள். அவனும் அந்த ஸர்ப்பத்தை விட்டுவிட்டான்.
நீதி: அவரவர் செய்த கர்மாக்களிலிருந்து தப்பவே முடியாது. அதனால் நல்லவற்றை செய்ய வேண்டும் .
- விலம்ப வர்ஷம் மாசி / Feb 2019
ஒரு ஸமயம் மஹாவிஷ்ணு யோகநித்ரையில் இருந்தார். அதே நிலையில் இருந்துக்கொண்டு, பல குணங்களைக் கொண்ட இந்த உலகின் ஸ்ருஷ்டியைப் பற்றி யோசிக்கலானார். அந்த சிந்தனையிலிருந்து ஸத்வகுணத்தின் மூலம் தேஜோமயமான நான்கு முகம் கொண்ட ப்ரஹ்மா தோன்றினார். ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் மேல் அமர்ந்தபடி அங்கும் இங்கும் பார்க்கலானார். எல்லா பக்கமும் ஒரே ஜலமயமாக இருந்தது. ப்ரஹ்மாவும் பகவானுடைய ஸத்வ குணத்திலிருந்து ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார். அதே தாமரைமலரின் இலையில் ஒரு ஓரத்தில் ரஜோகுணமும் தமோகுணமும் இரண்டு துளிகளாக இருந்தன. பகவான் அந்த இரண்டு துளிகளையும் ஒரு கணம் பார்த்தார். உடனே அந்த ரஜோ குணம் கொண்ட துளி மது கைடபன் என்ற இரண்டு ராக்ஷஸர்களாக உரு மாறின. இவர்கள் மிகவும் பலம் கொண்டவர்களானதால் கையில் ஒரு கதையைக் கொண்டு உடனே ப்ரஹ்மாவை நோக்கி வந்தனர். அருகில் வந்த அவர்கள் அவர் ப்ரஹ்மாவையும் அவர் அருகில் தேஜஸுடன் ப்ரகாசிக்கும் நான்கு வேதங்களையும் பார்த்தனர். உடனே அந்த வேதத்தை அபஹரித்துக் கொண்டு ரஸாதலத்தில் சென்று மறைந்து விட்டனர். ப்ரஹ்மா பதைபதைத்து பகவான் விஷ்ணுவை நோக்கி, “வேதம் தான் என் பலம், அவைதான் என் கண்கள். இந்த வேதங்களை இவர்கள் எடுத்துச் சென்றதால் நான் ஸ்ருஷ்டி பண்ணிய உலகம் முழுதும் இருண்டு போய்விட்டது” என்று சோகத்தில் அழுது கதறினார். பகவானை பலவாறு துதித்தார். நித்ரையிலிருந்து விழித்த பகவான் உடனே வேதங்களைக் காக்க ஒரு அழகான பவித்ரமான வெள்ளைக் குதிரை முகம் கொண்டார். பூமியே அவர் நெற்றியாகவும் , நக்ஷத்ரம் ஜ்வலிக்கும் ஆகாயம் அவர் தலையாகவும், சூரியனும் சந்த்ரனும் அவர் கண்களாகவும் இருந்தன. இப்படி அழகாக இருந்த ஹயக்ரீவர் உடனே ரஸாதலத்தில் குதித்து ஸ்வரசுத்தத்துடனும் உச்ச ஸ்வரத்திலும் நேர்த்தியாக ஸாமகானம் செய்தார். அதைக் கேட்டு அந்த சப்தத்தின் வசப்பட்ட அந்த அசுரர்கள் தாமும் மேலே வந்தனர். உடனே பகவான் அங்கே சென்று அந்த வேதங்களை மீட்டுக் கொண்டு வந்து ப்ரஹ்மாவிடம் தந்தார். ஸமுத்ரத்தின் வடகிழக்கு பகுதியில் அந்த ஹயக்ரீவ உருவத்தை ஸ்தாபித்து மீண்டும் பழையபடி சயனத்தில் ஆழ்ந்தார். இப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த வேதத்தை காணாமல் அந்த இரண்டு ராக்ஷஸர்கள் அங்கே வந்தனர். அங்கே பகவானைப் பார்த்து இவர் தான் எடுத்துச் சென்றிருப்பார் என்று இருவரும் தமக்குள் பேசிக்கொண்டனர்.
பகவானை எழுப்பினர். பகவான் இவர்களுடன் நன்றாக யுத்தம் செய்து அவர்களை வதம் செய்து அடக்கினார்.இப்படியாக பகவான் வேதங்களைக் காப்பதற்காக ஹயக்ரீவ அவதாரம் செய்தார்.
பலன் : எந்த ப்ராஹ்மணன் இந்த ஹயக்ரீவ அவதாரக் கதையைக் கேட்டாலோ நினைத்துக் கொண்டாலோ அவர்களுடைய அத்யயன பலன் குறையாமல் நன்றாக ஸித்திக்கும்
7.விலம்ப வர்ஷம் தை / Jan 2019
ஒரு முறை நதிகளின் தலைவனான ஸமுத்ரராஜன் மனதில் ஒரு ஸந்தேஹம் தோன்றியது. உடனே நதிகளை எல்லாம் அழைத்து,”நதிகளே என் மனதில் ஒரு ஸந்தேஹம். நீங்கள் இவ்வளவு பலமுள்ள உங்கள் ப்ரவாஹங்களினால் பல மரங்களை வேரோடு பெயர்த்துக் கொண்டு என்னிடம் வருகிறீர்களே. ஆனால் இதுவரையில் ஒரு நாணலைக் கூட கொண்டு வந்ததில்லையே? அது ஏன்? என்று கேட்டார்.
“அவை உங்கள் கரைகளில் நிறைய வளர்கின்றன. அவை மிகவும் பலவீனமானவை என்ற ஏளனத்தினால் அப்படிச் செய்கிறீர்களா? இது பற்றிய உண்மையை அறிந்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று மேலும் கேட்கலானார். உடனே அங்கே இருந்த கங்கை நதி சொன்னாள், “மரங்கள் தாங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் திடமாக நிற்கின்றன. மேலும் தங்கள் பலத்தினால் எங்கள் ப்ரவாஹங்களை எதிர்க்கின்றன. அதனால் அவை இந்த இயற்கை குணத்தால் வேரறுக்கப்படுகின்றன. அனால் இந்த நாணல்களோ காலத்திற்கேற்றவாறும் எங்கள் நதி நீரின் பலத்திற்கேற்றவாறும் வளைந்து கொடுக்கின்றன. இவ்வாறு காற்று நீர் போன்ற இயற்கையை புரிந்துக் கொண்டு அதன் தன்மைக்கு வளைந்து கொடுப்பவர்களை நாங்கள் வேரறுப்பதில்லை” என்றாள். ஸமுத்ரராஜனும் தன் அலைகளால் இதை ஆமோதித்தார்.
நீதி: அறிவுள்ளவர் வாழக்கையில் தன் பலம், பிறர் பலம், காலம், இடம் எல்லாம் அறிந்த நாணலைப் போல நடந்து கொள்ள வேண்டும்.
6.விலம்ப வர்ஷம் மார்கழி – Dec 2018
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரம். அம்மரத்தில் பலவகையான பறவைகள் இருந்தன. அதன் கீழே உள்ள பொந்தினுள் பலிதன் என்ற புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது. அதே மரத்தில் லோமஶன் என்ற பூனையும் வாழ்ந்து வந்தது. அங்கே வேடன் ஒருவன் அங்கே வந்து வலையை விரித்து விட்டுச் செல்வான். அதில் சிக்கிய ப்ராணிகளை மறுதினம் எடுத்துச் செல்வான். இப்படி இருக்கையில், ஒரு நாள் அந்த வலையில் பூனையும் சிக்கியது. அந்த வலைக்கு அருகே வைக்கப்பட்ட மாமிசத்தை மோப்பம் பிடித்துக்கொண்டு அந்த எலியும் அங்கே வந்து அமர்ந்தது. அதே சமயம் ஹரிணன் என்ற கீரி அங்கே வந்து அந்த எலியைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது. மரத்தின் மேலேயோ சந்த்ரகன் என்ற ஆந்தை எலியை சாப்பிட ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தது. பலிதன் சுற்றுமுற்றும் பார்த்தது. “இந்த பக்கம் போனால் கீரி நம்மை விழுங்கி விடும், பொந்தை நோக்கிப் போனால் ஆந்தை நம்மை கொத்தி விடும்! இப்படி எல்லாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்கிறதே!” என்று எண்ணி, சிறிது நேரம் சிந்தித்த பின், “நம்மைப் போன்ற புத்திசாலிகள் பயப்படக்கூடாது, இதற்கு விவேகத்தால் ஒரு உபாயம் செய்யவேண்டும்” என்று மீண்டும் யோசிக்கலாயிற்று. “நமக்கு இப்போது இந்த பூனையை விட்டால் வேறு வழி இல்லை” என்று முடிவு செய்து லோமஶனை நோக்கி. “பூனை அண்ணா! பயப்படாதீர்கள், நான் ஒரு நண்பனாக பேசுகிறேன். உங்களுக்கு உதவி செய்து இந்த வலையைக் கடித்தால் நீங்கள் உயிர் தப்பலாம். அதோ பாருங்கள் அந்த துஷ்ட கீரியும் பொல்லாத ஆந்தையும் என்னை சாப்பிடக் காத்திருக்கிறார்கள், அதனால் எனக்கும் உங்கள் உதவி தேவை” என்றது. புத்திசாலியான பூனையும் அதன் பேச்சில் உள்ள உண்மையை ஒத்துக் கொண்டு இதற்கு உடன்பட்டது. எலி பூனையின் முதுகில் ஏறி அமர்ந்தது. இதைப ஆச்சரியமாகப் பார்த்து ஆந்தையும் கீரியும் ஏமாற்றம் அடைந்து தத்தம் வழியில் சென்றன. பூனையை சுற்றி இருந்த வலையை எலி மிகவும் மெதுவாகக் கடிக்க ஆரம்பித்தது. பொழுதும் விடிய ஆரம்பித்தது. லோமஶன் “நண்பா! ஏன் இவ்வளவு தாமதம்? நேரம் ஆகிறதே இன்னும் சீக்கிரமாகக் கடிக்கலாமே” என்றது. பலிதன் உடனே, “நான் இப்போது உன்னை விடுவிக்க மாட்டேன். சரியாக வேடன் வரும் ஸமயத்தில் உன்னை விடுவிக்கப் போகிறேன். அப்போது தான் நீ உன் ஸ்வபாவகுணத்தால் என்னை ஹிம்ஸிக்காமல் வேடன் மூலம் வரும் ஆபத்துக்கு அஞ்சி, நேராக மரத்தில் ஏறி விடுவாய்” என்றது. அவ்வாறே பொழுதும் புலர்ந்தது. வேடனும் வந்தான். அவன் அருகே வர வர பலிதன் மிக வேகமாக வலையைக் கடிக்கலாயிற்று, அவன் வரும் ஸமயத்தில் லோமசன் விடுவிக்கப்பட்டான். பலிதன் சொன்னது போல நேராக மரத்தில் ஏறி மறைந்தான். பலிதனும் தன் பொந்துக்குள் நுழைந்தான்.
நீதி: ஒரு புத்திசாலியான எதிரி அறிவற்ற நண்பனை விட சிறந்தவன். எதிரியுடன் ஒப்பந்தம் செய்கையில் சமயோசிதமாக செயல்பட வேண்டும்
5.விலம்ப வர்ஷம் கார்த்திகை November 2018
ஏழை ப்ராஹ்மணன் ஒருவன் யஜ்ஞம் முதலிய தர்ம கார்யங்கள் செய்வதற்காக தனத்திற்கு ஆசைப்பட்டு தவம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் எந்த தேவதையும் அவன் முன் தோன்றவே இல்லை. அப்போது தேவதைகளின் பின்னால் செல்லும் குண்டதரன் என்ற மேகத்தைப் பார்த்தான். அவனைப் பார்த்த ப்ராஹ்மணன், “ஆஹா இவன் நிச்சயமாக நமக்கு நல்லது செய்வான்” என்று நினைத்து அந்த அந்த மேகத்துக்குப் பக்தியுடன் பூஜை செய்யத் தொடங்கினான். அவன் பூஜையில் ஸந்தோஷம் அடைந்த குண்டதரன் அவன் முன் தோன்றினான். அதற்குள் அந்த ப்ராஹ்மணன் களைத்துப் போய் அங்கேயே தூங்கிப்போய், கனவில் சில காட்சிகளைக் கண்டான். மணிபத்ரன் என்ற யக்ஷன் தேவர்களிடம் எல்லோருடைய ஶுப-அஶுப கர்மங்களுக்கேற்ப பலன்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். சிலருக்கு தனமும் ராஜ்யமும் கிடைத்தது. சிலருக்கு இருக்கும் செல்வமும் ராஜ்யமும் பறிபோனது. மணிபத்ரன் அங்கே வந்த குண்டதரனைப் பார்த்தான். அவனிடம் “ஓ குண்டதரனே உனக்கென்ன வேண்டும் கேள்!” என்றான். குண்டதரன் “என் பக்தன் ஒரு ப்ராஹ்மணன் இருக்கிறான். அவனுக்கு உங்கள் அருள் வேண்டும்” என்றான். மணிபத்ரன் “தனம் வேண்டுமா? என்றான்”. குண்டதரன் யோசிக்க ஆரம்பித்தான். பிறகு “இல்லை, இவனை எப்போதும் தர்மாத்மாவாக இருக்கும்படி செய்யுங்கள்”. மணிபத்ரன் “தர்மத்தின் பலன் சுகங்களை அனுபவிப்பது அதனால் அவன் சுகமாக இருப்பதற்கு வழி செய்யலாமே” என்றான். குண்டதரன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி “இல்லை இல்லை இவனை எப்போதும் தர்மம் ஒன்றையே நினைப்பவனாக ஆக்குங்கள்” என்றான். மணிபத்ரன் “சரி அவன் எப்போதும் தர்மநிஷ்டனாக இருப்பான்” என்றான். இதைக் கேட்ட ப்ராஹ்மணன் “இந்த குண்டதரனும் நாம் கேட்டதைக் கொடுக்கவில்லை” என்று மிகவும் விரக்தி அடைந்தவனாகக் காட்டுக்குப் போய் கடுந்தவம் செய்தான். ஆனால் தேவர்களின் வரத்தால் அவன் மனதில் எப்போதும் தர்மசிந்தனை மட்டுமே குடிகொண்டிருந்தது. இதனால் அவன் தபஶ்ஶக்தி பல மடங்கு வளர்ந்தது. மேலும் மேலும் தர்மம் ஒன்றையே நினைத்து தொடர்ந்து தவம் செய்த்தான். அவன் நினைத்த மாத்திரத்தில் ராஜ்யமும் செல்வமும் பிறருக்கு அளிக்கும் ஸித்திகளும் கிடைத்தன. அவற்றைப் பலருக்கு தானமாகக் கொடுத்தான். அப்போது மீண்டும் குண்டதரன் தோன்றினான் “ஓ ப்ராஹ்மணா! இங்கே பார் ராஜ்யமும் செல்வமும் பெற்றவர்கள் பிறகு எப்படி துன்பப் படுகிறார்கள்! அதனால் தான் உனக்கு தர்மத்தை கொடுத்தேன். இப்போது புரிந்ததா?” என்றான். ப்ராஹ்மணனும் குண்டதரனை நமஸ்கரித்து “நீங்கள் எனக்கு மிகவும் உபகாரம் செய்திருக்கிறீர்கள்” என்றான்.
நீதி: தர்மம் மட்டுமே நின்று நிலைக்கும்
4.விலம்ப வர்ஷம் ஐப்பசி Oct 2018
ஒரு காட்டில் நல்ல தவஸ்ரேஷ்டரான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் எல்லா ப்ராணிகளிடமும் மிகவும் அன்பாக இருப்பார். அவரைத் தேடி பல மிருகங்களும் பறவைகளும் வரும். அவர் காலடியில் ஒரு நாயும் உட்கார்ந்து வந்தது. மஹரிஷியின் ஸத்குணத்தையும் ஞானத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நாய், தானும் மாமிஸம் சாப்பிடுவதை நிறுத்தியது. அங்கேயே ஸாத்வீகமான குணத்துடன் அந்த நாய் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அங்கே ஒரு சிறுத்தை அதை சாப்பிட வந்தது. நாய் ஓடிச் சென்று “ஓ மஹரிஷே! என்னை காப்பாற்றுங்கள்” என்றது. ரிஷியும் “சரி உனக்கு என் தபோபலத்தினால் சிறுத்தை வடிவம் கொடுக்கிறேன்” என்றார். சிறுத்தையாக மாறிய நாய், வேட்டையாடி மாமிஸம் சாப்பிட்டு, தன் பழைய வழிக்கே சென்றது. சில காலத்துக்குப் பிறகு, அங்கே ஒரு புலி வந்து அதைத் துரத்தியது. சிறுத்தை அந்த ரிஷியிடமே வந்து “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சியது. ரிஷியும் அதை புலியாக மாற்றினார். புலியாக சில நாள் சுற்றிக் கொண்டிருந்த பின், அங்கே ஒரு பெரிய யானை வந்தது. அதற்கு பயந்து மீண்டும் ரிஷியின் காலில் விழ, அவரும் அந்த புலியை யானையாக மாற்றிவிட்டார். யானையாக தடாகங்களில் தண்ணீரில் விளையாடி ஸந்தோஷமாகப் பொழுதைக் கழித்தது. கொஞ்ச நாளிலேயே அங்கே ஒரு சிங்கம் வர, அதற்கு பயந்து மீண்டும் ரிஷியின் கருணையால் அந்த யானை சிங்கமாக உரு மாறியது. அப்படியே சில நாள் போனது. அப்போது அங்கே அங்கே ஒரு ஶரபம் வர, திரும்பவும் பயத்தில் ரிஷியினிடத்தில் வந்தது. ரிஷியும் அதை ஶரபமாக மாற்றிவிட்டார். மாமிசம் நன்றாக சாப்பிட்டு, ரத்தம் குடித்துப் பழகிப் போன அந்த ஶரபம் அங்கே அமர்ந்திருந்த ரிஷியைப் பார்த்துக் கொண்டே, “இவர் உயிரோடு இருந்தால் இவரிடம் வரும் மற்ற ப்ராணிகளின் மீதும் கருணை கொண்டு அவற்றையும் ஶரபமாக மாற்றி விடுவார். அதனால் இவரைக் கொன்று விடலாம்” என்று யோசித்தது. தன் தபஸ் சக்தியினால் இதை அறிந்த ரிஷிக்கு மிகவும் கோபம் வந்தது, “ஏ நாயே, உன்னை சிறுத்தையாக்கி, புலியாக்கி, யானையாக்கி சிங்கமாக்கி ஶரபமும் ஆக்கினேன். உன் கீழ்த்தரமான நடத்தையை என்னிடமே காட்டுகிறாயா? நீ மீண்டும் நாயாகவே ஆகி விடு” என்று அதை திரும்பவும் நாயாகவே மாற்றிவிட்டார்.
நீதி: தாழ்ந்த குணம் உடையவர்களுக்கு உயர்வான பதவி கொடுக்கக் கூடாது. நன்றி மறக்காமல் இருப்பது நல்லது
3.விலம்ப வர்ஷம் புரட்டாசி Sep 2018
ஶங்கர் லிகிதர் என்று இரண்டு ரிஷிகள் இருந்தனர். இருவரும் ஸஹோதரர்கள் மற்றும் பெரும் தபஸ்விகள். பாஹுதா நதிக்கரையில் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே அழகான ஆஶ்ரமங்கள் இருந்தன. ஒரு நாள் லிகிதர் ஶங்கரின் ஆஶ்ரமத்திற்கு வந்தார். அந்த சமயம் பார்த்து, ஶங்கர் வெளியே சென்றிருந்தார். லிகிதர் அங்கே நன்றாக பழுத்திருந்த பல பழங்களைப் பார்த்தார். அவற்றை எல்லாம் பறித்து , அருகில் வைத்துக் கொண்டு வயிறார சாப்பிட ஆரம்பித்தார். சற்று நேரத்திற்கெல்லாம் ஶங்கர் வீடு திரும்பினார். சாப்பிட்டுக் கொண்டிருந்த லிகிதரைப் பார்த்து, “இந்த பழங்கள் உனக்கு எங்கே கிடைத்தன? எதற்காக இவற்றை சாப்பிடுகிறாய்?” என்று கேட்டார். லிகிதர் அவரை நமஸ்கரித்து சிரித்துக் கொண்டே, “அண்ணா நான் இங்கிருந்து தான் இந்த பழங்களை எடுத்துக் கொண்டேன்”. லிகிதர் கோபத்துடன், “நான் உனக்கு இவற்றைக் கொடுக்காமல் நீயே எடுத்துக் கொண்டிருப்பது திருட்டுத்தனம். அதனால் ராஜாவிடம் போய், “அரசே, நான் எனக்குக் கொடுக்கப்படாததை எடுத்துக் கொண்டேன். நான் ஒரு திருடன். அதனால் ஒரு திருடனுக்கு என்ன தண்டனை உண்டோ அதை எனக்குக் கொடுங்கள் என்று சொல்” என்றார். லிகிதரும் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ராஜா ஸுத்யும்னனின் அரசவையை நோக்கிச் செல்லலானார். ராஜா அவரை வணங்கி வரவேற்று “முனிவரே நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்” என்று பணிவுடன் கேட்க, லிகிதர் “நான் கேட்பதை முதலில் நிச்சயம் கொடுப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு , “நான் என் அண்ணாவின் தோட்டத்திலிருந்து எனக்குக் கொடுக்கப்படாத பழங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டேன். அதனால் ஒரு திருடனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனையைத் தர வேண்டுகிறேன்” என்றார். ஸுத்யும்னன் “அரசனுக்கு எப்படி தண்டனை தர அதிகாரம் இருக்கிறதோ, அதே போல மன்னிக்கவும் அதிகாரம் இருக்கிறதே” என்றான். லிகிதர் அவனிடம் விடாப்பிடியாக தண்டனை தரும்படி வற்புறுத்தவே கடைசியில் தன மந்திரியிடம் ஆலோசித்து “திருடிய இவரது கைகளை வெட்டி விடுங்கள்” என்று ஆணை பிறப்பித்தான். தண்டனையை இன்முகத்துடன் ஏற்ற லிகிதர், அங்கிருந்து போய் ஶங்கரிடம் மன்னிப்பு கேட்டார். அவரை மிகவும் பாராட்டிய ஶங்கர் “எனக்கு உன் மேல் எந்த கோபமும் இல்லை. நம் குலம் தர்மத்தைக் காக்கும் குலம். நீ அதர்மம் செய்ததால் தான் இந்த பிராயச்சித்தத்தை உனக்கு சொன்னேன்.நீ போய் பாஹுதா நதியில் தர்ப்பணம் செய்வாய்” என்றார். அங்கே சென்றவுடன் லிகிதருக்கு அவருக்கு இரண்டு அழகான கைகள் தோன்றின. ஆச்சரியத்துடன் திரும்பியவர், “அண்ணா உன் தபஸ்ஶக்தியால் முன்னரே என்னை குற்றமற்றவனாகச் செய்திருக்கலாமே? ” என்றார். ஶங்கர், “உண்மை, ஆனால் எனக்கு உன்னை தண்டிக்கும் அதிகாரம் இல்லை, அரசனுக்குத் தான் இருக்கிறது, அதை நீ நல்மனதுடன் ஏற்றதால் பவித்ரன் ஆனாய்” .
நீதி: தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தையே செய்ய வேண்டும். மூலம்: மஹாபாரதம்
2.விலம்ப வர்ஷம் ஆவணி Aug 2018
–
ஸத்யயுகத்தில் ஒரு ஒட்டகம் இருந்தது. அந்த ஒட்டகத்திற்கு தன் பூர்வஜென்மத்தின் நினைவுகள் இருந்தன. மிகுந்த நியமங்களுடன் கடுந்தவம் புரிந்தது. பிரம்மா அதன் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். ஒட்டகம், “உங்கள் அருளால் என் கழுத்து நீண்டு வளரட்டும். நூறு யோஜனை தூரத்தில் இருக்கும் பொருட்களையும் நான் இங்கே இருந்தபடியே சாப்பிட விரும்புகிறேன்” என்று கேட்டது. பிரஹ்மாவும் “அப்படியே ஆகட்டும்” என்றார். இப்படி ஒரு வரம் வாங்கி கொண்டு வெகு சீக்கிரம் ஒட்டகம் மிகவும் மிகவும் சோம்பேறியாகி மேய்ச்சலுக்கு எங்கேயும் செல்லாமல் இருந்தது.
ஒரு நாள் இவ்வாறு தான் இருந்த இடத்திலிருந்தே பல யோஜனைகளுக்கப்பால் இருந்த உணவைத் தன் கழுத்தை நீட்டியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு பெரிய புயல் அடித்தது. புயலும் மழையும் ஓயும் வரை காத்திருக்கலாம் என்று அந்த ஒட்டகம் எண்ணியது. தன் கழுத்தின் ஒரு பகுதியை ஒரு மலைக்குகைக்குள் நுழைத்துக் கொண்டது. அதே குகைக்குள் ஒரு ஓநாயும் அதன் மனைவியும் மழைக்காக ஒதுங்கி இருந்தன. அவை மிகுந்த பசியுடன் களைப்பாக இருந்தன. அந்த ஒட்டகத்தின் கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து சாப்பிட ஆரம்பித்தன. தன் கழுத்து கடிக்கப்படுவதை உணர்ந்த ஒட்டகம், உள்ளே இழுத்துக் கொள்ள முயன்றது. அப்படியும் இப்படியும் தலையை அசைத்துப் பார்த்தது. ஆனால் அந்த ஓநாய்கள் அதன் கழுத்தை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. புயல் ஓய்ந்தபின் அந்த ஓநாய்கள் வெளியே வந்தன. ஆனால் அதற்குள் ஒட்டகம் இறந்து போய் விட்டது.
நீதி: சோம்பலை விலக்க வேண்டும்.
- விலம்ப வர்ஷம் ஆடி July 2018
ஸமுத்ரதீரத்தில் பணக்காரன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பிராணிகளிடம் மிகுந்த தயை உள்ளவன். அவனுக்கு பல பிள்ளைகள். அவனிடத்தில் ஒரு காக்கை வளர்ந்து வந்தது. அவன் பிள்ளைகள் அந்த காக்கைக்கு தயிர்,மாமிசம், இனிப்பு வகைகள், என்று நிறைய சாப்பிடக் கொடுத்தனர். அதை எல்லாம் தின்று, நன்றாகக் கொழுத்து மிகவும் அஹங்காரத்துடன் தனக்கு யாருமே ஸமானம் இல்லை என்று திரிந்துக் கொண்டிருந்தது அந்த காக்கை. ஒரு நாள், அங்கே அழகான சில ஹம்ஸபக்ஷிகள் வந்தன. அதை பார்த்த அந்த அல்பபுத்தி உடைய பிள்ளைகள், காக்கையிடம், “அங்கே பார்! இந்த ஹம்ஸபக்ஷிகள் தாங்கள் தான் பறப்பதில் சிறந்தது என்று நினைத்துக் கொண்டு பறக்கின்றன. நீயும் அது போல பறக்க வேண்டாமா?” என்றனர். அந்த காக்கைக்கு கர்வம் தலைக்கு ஏறி விட்டது. அவற்றிற்கு அருகே பறந்து சென்று அந்த ஹம்ஸபக்ஷிகளில் எது மிக சிறந்ததாகத் தனக்குத் தோன்றியதோ அந்த பறவையிடம் சென்று, “வா நாம் இருவரும் பறக்கலாம்!” என்று சவால் விட்டது. அதைக் கேட்டு பலமாகச் சிரித்த ஹம்ஸபக்ஷிகள் , “நாங்கள் மானஸரோவரத்தில் வசிக்கும் ஹம்ஸங்கள். நீண்ட தூரம் பறக்க வல்லவர்கள். ஓ கெட்டபுத்தி காகமே, நீ எப்படி எங்களுடன் பறப்பாய்? என்றன. அந்த முட்டாள் காகம், அவற்றைப் பலவிதமாக நிந்தனை செய்து விட்டு, “நான் மேலே பறப்பேன், கீழே பறப்பேன், நாலா பக்கமும் பறப்பேன், பின்னோக்கிப் பறப்பேன், பக்கவாட்டில் பறப்பேன், பிறரைபோலப் பறப்பேன், வேகமாய்ப் பறந்து மெதுவாகப் பறப்பேன் ,சுழன்று பார்ப்பேன், ஸ்வர்க்கத்தை நோக்கிப் பறப்பேன்! ஆகவே பக்ஷிகளே, இப்படிப் பலவாறு பறக்கத் தெரிந்த என்னைப் பார்க்க நீங்கள் எல்லோரும் வாருங்கள். ம்ம்ம் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள், இப்போது நான் எப்படிப் பறக்க வேண்டும்?” என்றது. ஹம்ஸம் “ஏ காக்காயே எனக்கு ஒரு விதமாகத் தான் பறக்கத் தெரியும், அதனால் நீ உன்னிஷ்டப்படி பறந்து என்னுடன் வா” என்றது. இதைப் பார்த்த மற்ற காக்கைகள் ஹம்ஸத்தை ஏளனம் செய்தன. காக்கை பலவிதமாக பறந்து காட்டியது. மற்ற காக்கைகள் வெகுவாக ஆரவாரம் செய்தன. சீராக மெதுவாகப் பறக்க ஆரம்பித்த ஹம்ஸபக்ஷி,வேகமாகக் கடலுக்கு மேல் சென்று பறந்தது. காக்கையும் அதைப் பின் தொடர்ந்தது. சிறிது நேரத்திலேயே காக்கை களைத்துப் போய் அது ஓரிடத்தில் அமர்ந்து விட்டது. மெதுவாக அதனிடம் வந்த ஹம்ஸம், “இதென்ன புது மாதிரியாகப் பறக்கிறாய். எங்களிடம் சொன்ன வகைகளில் இது இருக்கவில்லையே” என்றது. காக்கை தான் மிகவும் களைத்திருப்பதாகச் சொன்னது. ஹம்ஸமும், “பல விதமாகப் பறக்கத் தெரியும் என்று பீற்றிக் கொண்டாயே , பறந்து வா” என்று சொன்னது. காகம் கர்வத்தினால் செய்த தன் தப்பை ஒப்புக் கொண்டு, “அய்யா, ஹம்ஸமே! என் பிராணன் உம் கையில் இருக்கிறது, நீயே சரணம்” என்றது. ஹம்ஸபக்ஷி காக்கையை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு கரையில் சேர்த்தது.
ஒரு ஸமயம் ஹைஹய வம்ஶத்து ராஜா பரபுரஞ்சயன் காட்டில் ம்ருகங்களை வேட்டையாடச் சென்றான். இப்படி அவன் சென்றுக் கொண்டிருந்த போது கருப்புமான் தோலை அணிந்த ஒரு முனிவர் உட்கார்ந்து தவம் செய்துகொண்டிருந்தார். அவரை ஒரு ம்ருகம் என்றே தவறாக நினைத்த ராஜா ஒரு அம்பை எய்து அவரைக் கொன்று விட்டான். தான் செய்த தப்பை உணர்ந்தவுடன், மூர்ச்சையாகி அங்கேயே கீழே விழுந்தான். மூர்ச்சை தெளிந்தபிறகு, மெதுவாக எழுந்து மற்ற ஹைஹய அரசர்களிடம் சென்று அந்த ராஜகுமாரன் நடந்த விஷயத்தை சொன்னான். பழங்களை மட்டுமே ஆஹாரம் செய்யும் ஸாத்வீகரான ஒரு முனிவரைக் கொன்று விட்ட வம்சத்தினராகி விட்டோமே என்று எல்லோரும் மிகவும் துக்கமாக இருந்தனர்.
பிறகு ஒரு வாறு பேசி முடித்து, இறந்த முனிவர் யார் என்று விசாரித்த போது அவர் அரிஷ்டநேமியின் புத்ரர் என்று தெரிய வந்தது. உடலே எல்லோரும் சேர்ந்து அவருடைய ஆஶ்ரமத்தை நோக்கிச் சென்றனர். அந்த மஹாத்மாவை வணங்கினார்கள். அந்த முனிவர் அவர்களை வரவேற்று அர்க்யாதி உபசாரங்களை கொடுத்தார்கள். அவர்கள், “முனிவரே நாங்கள் பெரிய பாவம் செய்து விட்டோம். நீங்கள் கொடுக்கும் பாநீயங்களை ஏற்கத் தகுதி இல்லாதவர்களாகி விட்டோமே ! அறியாமல் ஒரு ப்ராஹ்மணரை கொன்று விட்டோம். ப்ரஹ்மஹத்யை என்ற பாவம் செய்துவிட்டோமே ” என்றனர். அந்த ப்ரஹ்மரிஷியானவர், “அப்படியா? இது எப்படி நடந்தது? இறந்த அந்த ப்ராஹ்மணன் இப்போது எங்கே? அதைச் சொல்லுங்கள். அதன் பிறகு பாருங்கள் என் தபோபலத்தை” என்றார். முனிவர் இவ்வாறு கேட்டதும், அவர்கள் நடந்தவற்றை சொல்லி, ஸம்பவம் நடந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். அனால் அங்கே முனிவரின் ஶரீரத்தைக் காணவில்லை. அவமானத்தினால் கனவு கண்டவர்கள் போல் குழம்பிய மனத்துடன் அங்கும் இங்கும் தேடினார்கள். அதற்குள் அந்த முனிவர், “பரபுஞ்சய!, நீங்கள் யாரைக் கொன்றீர்களோ அந்த பிராஹ்மணன் இவர் தானே? இது வேறு யாரும் இல்லை, தபோபலம் மிக்க என் புத்ரன் தான் இவன்” என்று தன் மகனைக் காட்டினார். தாம் கொன்றதாக நினைத்த இவர் உயிருடன் இருப்பதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்து, “ஓ மஹர்ஷே! மரணம் அடைந்த இவர் எப்படி உயிருடன் இருக்கிறார்? இது தபோபலத்தினாலா? தயவு செய்து இந்த ரஹஸ்யத்தை சொல்ல வேண்டும்” என்று விநயத்துடன் கேட்டார்கள்.
முனிவர் ” சொல்கிறேன் கேளுங்கள். எங்களை ம்ருத்யு தீண்டவே தீண்டாது. ஏன் என்றால் நாங்கள் ஶுத்தமான ஆசாரம் உடையவர்களாக இருக்கிறோம். சோம்பல் உள்ளவர்களாக இருப்பதில்லை, ஸந்த்யோபாஸனையை தவறாது செய்கிறோம். ஶுத்தமான ஆஹாரத்தை புஜிக்கிறோம், ஶுத்தமான முறையில் எங்களுக்கு தனம் கிடைக்கிறது. ப்ரஹ்மசர்யத்தைக் கடைபிடிக்கிறோம். ஸத்யம் ஒன்றை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம்.பொய்யானவற்றில் எங்கள் மனம் செல்வதில்லை. இவ்வாறு ஸ்வதர்மத்தைக் கடைபிடிக்கிறோம். அதனால் ம்ருத்யு எங்களை அண்டுவதில்லை. பிற ப்ராஹ்மணரிடம் எது நல்லதோ அதை மட்டும் பேசுகிறோம். அவர்களின் தீச்செயல்களைப் பற்றி பேசுவதில்லை. இதனால் எங்களை ம்ருத்யு தொடுவதில்லை. அதிதி ஸத்காரம், ஶமதமாதி ஸத்குணங்களுடன் . தீர்த்தஸேவனம், தானம் ஆகியவை செய்கிறோம். மேலும் புண்யதேசங்களில் வாசம் செய்கிறோம், அதனால் ம்ருத்யு எங்களை ஒன்றுமே செய்வதில்லை. ப்ரஹ்மஹத்யை செய்து விட்டோம் என்ற பயம் தெரிந்தவர்களாக நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் ” என்றார். இதைக் கேட்ட அந்த ஹைஹய அரசர்கள் மிகவும் சந்தோசம் அடைந்து அவர்களை வணங்கி விடைபெற்றனர்.