Mahamahopadhyaya Hariharashastrigal

மஹாமஹோபாத்யாய ஸ்ரீ ஹரிஹர ஶாஸ்த்ரிகள் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருக்கோஷ்டியூர் கிராமத்தில் 1860ஆம் வருடம் (ரௌத்ரி) வருடம் பிறந்தார். இவரது தந்தையார் ப்ரஹ்மஸ்ரீ ராமஸ்வாமி அய்யர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன் மாதாமஹரிடம் வளர்ந்தார். ஶாஸ்த்ரோக்த சமயத்தில் அவருடைய உபநயனமும் நடந்தேறியது. அவரது உபநயனத்தின் போது, அவரைக் காண வந்த நண்பர்கள் சிலர் அவரை “ஆங்கிலக்கல்வி படிக்க விரும்புகிறாயா அல்லது ஸம்ஸ்க்ருதம் படிக்க விருப்பமா?” என்று கேட்க அவர் தாம் வேத ஶாஸ்த்ர பண்டிதராக விரும்புவதாக தயக்கமின்றி அறிவித்தார். இதைக் கேட்ட மற்ற நண்பர்கள் இவரை கேலி செய்தனர். இதைக் கண்டு அவர் கண்களில் கண்ணீர் பனித்தது. இதை கவனித்த மாதாமஹர் உடனே தன் பேரனின் பதிலைப் பாராட்டி நண்பர்களை அடக்கினார். இவ்வாறு சிறுவயதிலேயே ஸம்ஸ்க்ருதத்தின் மீதும் ஶாஸ்த்ரங்கள் மீதும் மிகுந்த நாட்டம் கொண்டவராகத் திகழ்ந்து அவற்றை முறையாகக் கற்றார்.
அத்யயனம்:
இவர் 1875-ஆம் ஆண்டு திருகோஷ்டியூரில் ஸ்ரீவைஷ்ணவரான மகாவித்வான் ஸ்ரீ.உ.வே. தாத்தா வேதாந்தாசார்ய ஸ்வாமி என்பவரிடம் தன் அத்யயனத்தை துவங்கினார். ஐந்து வருடங்களில் காவ்யம் நாடகம் அலங்காரம் மற்றும் தர்க்க ஶாஸ்த்ரத்தில் பதா³ந்த பாகம் வரை கற்றார். அதன் பிறகு சிலகாலம் பொந்துபுண்ணி ப்ரஹ்மஸ்ரீ சங்கர ஶாஸ்த்ரிகளிடம் கற்று, திருவிடைமருதூர் என்னும் மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் சதுஶ்ஶாஸ்த்ர பண்டிதரான அண்ணா வாஜபேயீ என்பவரிடம் வ்யாகரணத்தில் மஹாபாஷ்யம் வரை அத்யயனம் செய்தார். அதன் பிறகு, வேதாந்த ஶாஸ்த்ரம் கற்க விழைந்தார்.
பூர்வ உத்தர மீமாம்சை கற்பதற்காக “மன்னார்குடி பெரியவா” என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட மஹாமஹோபாத்யாய மன்னார்குடி ராஜு ஶாஸ்த்ரிகளின் வித்யாஸ்தானமான மன்னார்குடிக்குச் செல்ல விழைந்தார். முதலில் தன்னை சிஷ்யனாக ஏற்பாரோ என்ற கவலை இவருக்கு இருந்தது. ஏனெனில் சற்று முன்னர் தான் திருக்கோஷ்டியூரிலிருந்து ஒருவர் அங்கு சென்று சில நாட்களிலேயே அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார். ஆனால் வித்யையின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தினாலும் குருபக்தியுடன் ராஜு ஶாஸ்த்ரிகளுக்கு இரண்டு மாதம் சுசுருஷை செய்தார். இவருடைய ஶ்ரத்தையையும் ஸத்வகுணத்தையும் கண்டு இவரை சிஷ்யராக ஏற்றுக் கொண்டார். அங்கேயே எட்டு வருடகாலம் தங்கியிருந்து, அவரிடம் பூர்வ மற்றும் உத்தர மீமாம்ஸா ஶாஸ்த்ரம் கற்று அவருக்கு பணிவிடையும் செய்து வந்தார். தர்க்க, வ்யாகரண க்ரந்தங்களுடன் வேதாந்தமும் கற்றார். ப்ரஹ்மானந்தீயம் முதலிய வாதக்ரந்தங்களையும் கற்றுத் தேர்ந்தார். மஹாமஹோபாத்யாய ப்ரஹ்மஶ்ரீ கருங்குளம் க்ருஷ்ணஶாஸ்த்ரிகள் இவர் ராஜு ஶாஸ்த்ரிகளிடம் கற்ற விதத்தை “தக்ஷிணாமூர்த்தியிடம் ஸனகாதியரும், ஹயக்ரீவரிடம் அக்ஸ்த்யரும், வேதவ்யாஸரிடம் ஜைமிநியும்” கற்றதற்கு ஒப்பிடுவார். கல்வி கற்கையில் இவர் நிதிநிலைமை குறைந்தே இருந்தது. ஆயினும் ஶாஸ்த்ரத்தைக் கற்பதிலேயே முழு கவனமும் செலுத்தினார். காலப்போக்கில் அவருக்கு சிலருடைய உதவி கிடைத்தது. திருவனந்தபுரம் மஹாராஜாவின் துலாபார மஹோத்ஸவத்தில் ஸன்மானம் பெற்றார்.
அத்வைத மஞ்சரி க்ரந்த பரிசீலனம்
கோனேரிராஜபுரம் ஶ்ரீ வி. ஸாம்பசிவ ஐயர் தன்னுடைய கும்பகோணம் ஶ்ரீவித்யா அச்சுக்கூடத்தின் மூலம் ஒரு லக்ஷ ரூபாய் செலவில் அத்வைதமஞ்சரீ என்ற பெயரில் க்ரந்தங்களை வெளியிட விரும்புவதாக ராஜு ஶாஸ்த்ரிகளை அணுகினார். இதற்காக ஒரு திறமிகு சிஷ்யரை அனுப்பித் தரும்படி கேட்க, மன்னார்குடி பெரியவாளும் ஹரிஹரஶாஸ்த்ரிகளை கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு தன் குருவின் அனுக்ரஹத்துடன், இவர் கும்பகோணம் வந்து பல க்ரந்தங்களை பரிசோதித்து வெளியிடும் பணியைச் செய்தார். அந்த க்ரந்தங்களின் விவரங்கள் பின்வருமாறு:
அத்வைதஸித்தி
அத்வைதஸித்தி வ்யாஸதீர்த்தரின் ந்யாயாம்ருதத்தை எதிர்த்து ஸ்ரீ மதுஸூதன ஸரஸ்வதி ஸ்வாமிகளால் எழுதப்பட்ட கண்டன க்ரந்தமாகும்.
1893-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அத்வைதஸித்தி க்ரந்தத்தை பரிசீலிக்கும் பணியைத் துவங்கினார். இதுவே அத்வைத மஞ்சரியின் முதல் வெளியீடு.
லகுசந்த்ரிகா / ப்ரஹ்மானந்தீயம்
ராமதீர்த்தர் என்பவர் “தரங்கிணி” என்ற பெயரில் ந்யாயாம்ருதத்திற்கு வ்யாக்யானம் எழுதினார். இது அத்வைதஸித்தியை கண்டித்து எழுதப்பெற்றது. கௌட ப்ரஹ்மானந்த சரஸ்வதீ என்று வழங்கப்படும் ஸ்ரீ ப்ரஹ்மானந்த ஸரஸ்வதி அத்வைதஸித்தியை எதிர்க்கும் தரங்கிணியைக் கண்டித்து தன்னுடைய லகுசந்த்ரிகா, குருசந்த்ரிகா ஆகிய கிரந்தங்கள் எழுதினார். ப்ரஹ்மாநந்தீயம் கற்காமல் அத்வைத வேதாந்த படிப்பு முற்றுப்பெறாது என்று கருதப்பட்டது. இத்தகைய பெருமை மிக்க லகுசந்த்ரிகா ஹரிஹர ஶாஸ்த்ரிகளால் பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இரண்டாம் நூல்.
ஸித்தாந்தபிந்து வ்யாக்யானம்
ஸ்ரீ மதுஸூதன ஸரஸ்வதி பகவத்பாதருடைய தசஸ்லோகிக்கு எழுதிய வ்யாக்யானமே ஸித்தாந்தபிந்து. இது அத்வைத ப்ரகரண க்ரந்தங்களில் ஒன்றாகும். இதையும் ஸ்ரீ ப்ரஹ்மானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய வ்யாக்யானமாகிய ந்யாயரத்னாவலியுடன் பரிசோதித்து வெளியிட்டார்.
ப்ரஹ்மஸூத்ர வ்ருத்தி
1894 ஆம் வருடம் ப்ரஹ்மஸூத்ரவ்ருத்தி வெளியிடப்பட்டது. இது பகவத்பாதருடைய சிஷ்யரால் இயற்றப்பட்டது.
ப்ரஹ்மவித்யாபரணம்
ஸ்ரீ ராமானந்த தீர்த்தர் மற்றும் ஸ்ரீ பூமானந்த தீர்த்தர்களுடைய சிஷ்யரான ஸ்ரீ அத்வைதானந்த யதி என்பவரால் இயற்றப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்ய வ்யாக்யானம். இது பல்வேறு வ்யாக்யானங்களைத் தொகுத்து வழங்குகிறது.
ஸித்தாந்தலேஶ ஸங்க்ரஹம்
இதைத் தொடர்ந்து ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் சித்தாந்த லேச ஸங்கிரஹம் க்ருஷ்ணானந்தரின் க்ருஷ்ணாலங்காரம் என்ற வ்யாக்யானத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இந்நூல் அத்வைதம் என்ற இலக்கை நோக்கிச் சென்ற பல்வேறு ஆசார்யர்களின் வழிகளை அழகுறக் கூறும்.
சிகரிணிமாலா
1895ஆம் ஆண்டு மே மாதம், அப்பய்ய தீக்ஷிதரின் சிவதத்வவிவேகத்தின் மீது மன்னார்குடி பெரியவாளால் இயற்றப்பட்ட சிகரிணிமாலா என்ற வ்யாக்யானம் பிரசுரம் செய்யப்பட்டது. இந்நூலில் சிவோத்கர்ஷம் வேதம், உபநிஷத், புராணம் என்று பல்வேறு இடங்களிலிருந்து மேற்கோள் காட்டி நிறுவப்பட்டிருக்கிறது
ந்யாயேந்துசேகரம்
1915-ஆம்வருடம் ஸ்ரீ அனந்தாழ்வான் இயற்றிய ந்யாயபாஸ்கர கிரந்தத்திற்கு எதிராக மன்னார்குடி பெரியவாளால் இயற்றப்பட்ட அத்வைத ஸமர்த்தன கிரந்தமாகிய ந்யாயேந்துசேகரத்தை காளஹஸ்தியில் அத்வைத சபையை நடத்தி வந்த துருவாடா ஸ்ரீராகவய்யர் என்பவர் மூலம் வெளியிட்டார்.
ஹரிஹர ஶாஸ்த்ரிகள் இயற்றிய நூல்கள்
ராஜு ஶாஸ்த்ரிகள் ந்யாயேந்துசேகரத்தின் முதற்பகுதியை மட்டுமே முடித்திருந்தார். இதன் உத்தர பாகத்தை ஹரிஹர ஶாஸ்த்ரிகள் எழுதி முடித்தார். இந்நூல் இன்னும் பிரசுரம் செய்யப்படவில்லை.
இது தவிர வேதாந்த ஸார ஸங்க்ரஹம் என்ற அத்வைத வேதாந்த தத்வங்களை சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடிய க்ரந்தம் ஒன்றையும் இவர் இயற்றினார். இந்நூல் இவரது சிஷ்யபரம்பரையினரிடம் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகாறும் வெளிவரவில்லை.
காஞ்சி காமகோடி பீடத்தின் 66-ஆவது ஆசார்யரான ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டது அத்வைத ஸபை என்ற அமைப்பு. ஶாஸ்த்ரிகள் அத்வைத ஸபையில் முக்யமான வித்வானாகவும் பரீக்ஷகராகவும் விளங்கினார். பல வைதிக விஷயங்களைப் பற்றி ப்ரவசனம் செய்தார். காளஹஸ்தி அத்வைத சபையின் முக்ய பரீக்ஷகராகவும் இருந்தார்.
சிதம்பரத்திற்குச் செல்லுதல் :
இவ்வாறு கும்பகோணத்தில் பல பிரசுர கார்யங்களை செய்து கொண்டிருந்த போது, மாயவரத்தைச் சேர்ந்த நேப்பத்தூர் ரங்கநாத அய்யர் என்பவர் தன் மகன் திருமணத்தை முன்னிட்டு வித்வத்சபை ஒன்றை நடத்த விரும்பு ராஜு ஶாஸ்த்ரிகளை அணுகினார். தன்னுடைய சிஷ்யர்கள் சிலரை அவரும் அனுப்பிக் கொடுத்தார். இவ்வாறு அச்சபையில் திருவாங்கூர் தனாதிகாரி தேரழுந்தூர் ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீராமச்சந்திர கனபாடிகள், ப்ரஹ்மஸ்ரீ திருவியலூர் மகாலிங்க ஶாஸ்த்ரிகள், ப்ரஹ்மஸ்ரீ மீமாம்ஸா நீலகண்ட ஶாஸ்த்ரிகள், ராஜு ஶாஸ்த்ரிகளின் பேரனான ப்ரஹ்மஸ்ரீ யஜ்ஞஸ்வாமி ஶாஸ்த்ரிகள் ஆகியோர் கூடி இருந்தனர். ஹரிஹர ஶாஸ்த்ரிகள் ப்ரஹ்மானந்தீயத்தில் வாக்யார்த்தம் செய்தார். திருவிசைநல்லூர் ராமசந்திர ஶாஸ்த்ரிகள் முதலானோர் பலர் அவரைப் பாராட்டினர்.
அந்நிகழ்ச்சிக்கு வ்யாகரணத்தில் வாக்யார்த்தம் செய்ய வந்திருந்த மஹாமஹோபாத்யாய தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் ஹரிஹர ஶாஸ்த்ரிகளை அணுகி சிதம்பரம் ஸம்ஸ்க்ருத வித்யாசாலையில் ப்ரதானாத்யாபகர் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு சிஷ்யர்களைத் தயாரிக்கும் பணியைச் செய்யுமாறு வேண்டினார். ஶாஸ்த்ரிகளோ தன் குருவான ராஜு ஶாஸ்த்ரிகளுக்கு அருகிலேயே இருக்க விரும்பினார். அவர் ஆஜ்ஞையின் படி செய்வதாகக் கூறினார். உடனே இந்த பாடசாலை ஸ்தாபகரான சபாபதி செட்டியார் தன்னுடைய ஆள் ஒருவரை மன்னார்குடிக்கு அனுப்பினார். ராஜு ஶாஸ்த்ரிகளும் ஹரிஹர ஶாஸ்த்ரிகளை இப்பொறுப்பை ஏற்கும்படி ஆஜ்ஞையிட்டு, “எங்கள் குலவிளக்கான அப்பய்ய தீக்ஷிதர் சிதம்பரத்தில் முக்தி பெற்றார். அந்த க்ஷேத்ரம் பெரிய வித்யாஸ்தானம். நீ அங்கு சென்றால் எனக்கும் அங்கு வந்து தரிசனம் செய்ய முடியும். அப்பகுதிகளில் அத்வைத வித்யை வளரும்” என்று அறிவுறுத்தினார். இவ்வாறு அந்த பொறுப்பை ஏற்றார். அக்காலத்தில் கலாசாலைகளில் ஊதியம் மிகக் குறைவே. ஒரு நாளுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் பாடம் நடத்தினார், தம்மை அணுகியவர்களுக்கெல்லாம் ஸந்தேஹ நிவர்த்தியும் செய்து வந்தார்.
ஒரு முறை தன் குரு உத்தரதேச யாத்திரை செல்கையில் அங்கே விஜயம் செய்த போது, தன் குருவின் முன்னிலையில் தன் சிஷ்யர்களை ப்ரஹ்மாநந்தீயத்தில் வாக்யார்த்தம் செய்யும்படி பணித்தார். இவ்வாறு நான்கு ஶாஸ்த்ரங்களிலும் தேர்ந்த பல பண்டிதர்களை உருவாக்கினார். ஆந்திரா முதலிய பல்வேறு இடங்களிலிருந்து பண்டிதர்கள் வந்து அத்வைத ஸித்தியும் ப்ரஹ்மாநந்தீயமும் இவரிடம் பயின்றனர்.
விருதுகளும் பாராட்டுகளும்
காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகதகுரு, மற்றும் சிருங்கேரி பீடத்தின் ஜகத்குரு இவர்களால் பாராட்டப்பட்டார். ஸ்ரீ உத்திராதி மடமும் இவருக்கு ஸம்பாவனை செய்தது. ஸ்ரீமான் கே வீ ரங்கஸ்வாமி ஐயங்காரால் நடத்தப்பட்ட வித்வத்சபையில் இவரும் சிஷ்யர்களுடன் கலந்து கொண்டு அத்வைத வேதாந்த வாக்யார்த்தமும் உபந்யாஸமும் வெகுசிறப்பாகச் செய்தார். ராமநாதபுரம் ராஜா ஸ்ரீ பாஸ்கர சேதுபதி இவருக்கு சால்வை போர்த்தி தோடாவும் அளித்து பஹுமானித்தார்.
1914 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் மஹாமஹோபாத்யாய விருதைப் பெற்றார். ராஜு ஶாஸ்த்ரிகள் காலமான போது இவர் ஆசௌச நியமத்தைக் கடைபிடித்தார். இவரது குருபக்தியை மெச்சி மஹாமஹோபாத்யாய யஜ்ஞஸ்வாமி ஶாஸ்த்ரிகள் தன் பிதாமஹரின் சரித்திரத்தில் கீழ்க்கண்டவாறு இவரைப் பற்றி எழுதினார்:
गुरुवरानुग्रह भागधेयभाजनं
गुरुचरण-दीक्षितचरण-गौरीरमण-चरण-नलिन-भक्ति-निर्भरान्तरङ्गः
तर्क-व्याकृति-वेदान्त-प्रवचन-निस्तन्द्रः
शिष्टः प्रश्रयभूषणः
श्रीमदद्वैतसभाव्यवहार-विस्तरीकृतासामान्य-शास्त्रनैपुण्यः
1915-ஆம் வருடம் மஹாமஹோபாத்யாய ஹரிஹர ஶாஸ்த்ரிகள் மைசூர் ஸமஸ்க்ருத கல்லூரியில் அத்வைத வேதாந்த பேராசிரியராக நியமிக்கப்பட்டார். உடல் நிலை நன்றாக இல்லாத போதும் அப்பொறுப்பை ஏற்றார். தன்னுடன் தேதியூர் ப்ரஹ்மஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகளையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கே மஹாராஜா வித்வத் ஸபையின் அத்யக்ஷராக இருந்தார். அங்கே மஹாவித்வான், ஆஸ்தான தர்மாதிகாரி போன்ற விருதுகளைப் பெற்றார். சாரதா கும்பாபிஷேகத்தின் போது சிருங்கேரி சென்று ச்ருதி சிரோபூஷணம் என்கிற விருதையும் ஸம்பாவனைகளையும் பெற்றார்.
அடுத்த வருடம் காசிபாரத தர்மமண்டலி அவருக்கு வேதாந்தவாரிதி என்ற விருதை அளித்தது. அங்கே அமைக்கப்பட்ட ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஹரிஹர ஶாஸ்த்ரிகள் பாடத்திட்டம் வகுக்கும் குழுவிலும் சேர்க்கப்பட்டார்.
1916ஆம் வருடம் டிசம்பர் மாதம் மைசூரில் நோய்வாய்ப்பட்டார். தாம் நீண்டநாள் வாழ மாட்டோம் என்று உணர்ந்த அவர் தன் குருநாதரின் முன்பு இட்ட ஆஜ்ஞைப்படி சிதம்பரம் அத்வைத ஸபைக்குச் செல்ல விரும்பி அவசர அவசரமாகக் கிளம்பினார். மிக அதிக அளவு ஜ்வரம் இருந்தபோதிலும் அகண்ட காவேரியில் வழியில் ஸ்நானம் செய்து சிதம்பரம் வந்தடைந்தார். மறுநாள் டிசம்பர் 23ஆம் தேதி அப்பய்ய தீக்ஷிதரைப் போல சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜரின் குஞ்சித சரணத்திலேயே உயிர் நீத்தார். அப்போது அவருக்கு வயது 56. தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டான நியமங்களையும் ஸத்கர்மாக்களையும் அனுசரித்து ஒளபாஸனம், தேவதார்ச்சனம், வைச்வதேவம் முதலியன தவறாது செய்வதோடு மட்டுமல்லாமல் தன் சிஷ்யர்களையும் அனுஷ்டானங்களை செய்யப் பணித்தார். ஸ்ரீஹரிஹர வேதாந்த பாடசாலை என்று அவர் நிறுவிய பாடசாலை பல வருடங்களாக நடந்து வந்தது.
சிஷ்ய பரம்பரை
இவரது முக்கியமான சிஷ்யர்கள் – அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அத்யாபகர் ப்ரஹ்மஸ்ரீ சிதம்பரம் தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர், சென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியின் முதல்வராக இருந்த ப்ரஹ்மஸ்ரீ கருங்குளம் க்ருஷ்ண ஶாஸ்த்ரிகள், ப்ரஹ்மஸ்ரீ நூரணி அனந்தகிருஷ்ண ஶாஸ்த்ரிகள், பண்டிதராஜ ராவ் பஹாதூர் எஸ். கே பத்மநாப ஶாஸ்த்ரிகள் ஆகியோர்.
நன்றி: இதை பரிசீலித்து திருத்தங்கள் கருத்துகள் சொன்ன ப்ரஹ்மஶ்ரீ நெரூர் ஶ்ரீரமண சர்மா அவர்களுக்கு என் வந்தனங்கள்.
நூல்கள் :
அத்வைதஸித்தி – கௌடப்ரஹ்மானந்த சரஸ்வதியின் லகுசந்திரிகையுடன், அத்வைதமஞ்சரி, கும்பகோணம் 1893, ஹரிஹர ஶாஸ்த்ரிகளால் பரிசோதிக்கப்பட்டது. அத்வைத மஞ்சரி வரிசை எண் 2
மதுஸூதன ஸரஸ்வதியின் அத்வைதசித்தி – லகுசந்திரிகை /கௌட ப்ரஹ்மானந்தி / ந்யாயரத்னாவளியுடன், ஹரிஹர ஶாஸ்த்ரிகளால் பரிசோதிக்கப்பட்டது.
ஸித்தாந்தலேஶ ஸங்கிரஹம் க்ருஷ்ணானந்தரின் கிருஷ்ணாலங்காரத்துடன் அத்வைத மஞ்சரி வரிசை எண் 5, 1894
ப்ரஹ்மஸூத்ரபாஷ்யம் – ப்ரஹ்மவித்யாபரணம் அல்லது தாத்பர்யதீபிகையுடன், 1894-95 அத்வைத மஞ்சரி வரிசை எண் 6
சிவதத்வவிவேகம், 1895 அத்வைத மஞ்சரி வரிசை எண் 7
ந்யாயேந்துசேகரம் – த்யாகராஜ மகி (ராஜு ஶாஸ்த்ரிகள் ) ஹரிஹர ஶாஸ்த்ரிகளால் பரிசோதிக்கப்பட்டது., கும்பகோணம் , 1915
Karl Potter, Encyclopedia of Indian Philosophies