Dandapaniswami Dikshitar

மஹாமஹோபாத்யாய சாஸ்த்ர ரத்நாகர ஸ்ரீதண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர்

ஸ்ரீ தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் சிதம்பரம் தில்லை வாழ் அந்தணர்கள் குடும்பத்தில் 1874-ஆம் ஆண்டில் தோன்றினார். இவர் தந்தை ஸ்ரீ சிவகாமீ வல்லப தீக்ஷிதர். தாய் சிவகாமசுந்தரீ. இவருடைய மூதாதையர் ஆன ஸ்ரீ மீனாக்ஷிநாத தீக்ஷிதர் தஞ்சாவூர் அரசரிடம் ஸன்மானம் பெற்றவர்.

சிதம்பரம் ஆறுமுக நாவலர் அவர்களின் சைவப்பிரகாச வித்யாலயத்தில் 10 வயது வரை தமிழ் சம்ஸ்கிருதம் முதலியவற்றை கற்றார். அங்கே பல பரிசுகளையும் வென்றார். 1883ஆம் ஆண்டு வேத சாஸ்த்ர தரங்கிணி என்னும் ரா.ம.சு. வித்யாசாலையில் தன்னுடைய மாமாவான சந்த்ரசேகர தீக்ஷிதர் மற்றும் அவர்களின் சிஷ்யர்களான பரமேஸ்வர தீக்ஷிதர் வெங்கடேச தீட்சிதர் ஆகியவர்களிடம் காவ்ய பாடம் கற்றார். சந்த்ரசேகர தீக்ஷிதர் மன்னார்குடி பெரியவரின் சிஷ்யர். பல யஜ்ஞங்களை செய்தவர்.

சிதம்பரத்தில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தவர். அதே பாடசாலையில் வெ.வைத்தீஸ்வர சாஸ்த்ரிகளிடம் சம்பூ காவ்யம், நாடகம் அலங்காரம், ஸித்தாந்த கௌமுதீ ஆகியன கற்றார். 1888-ஆம் ஆண்டு லக்ஷ்மீ என்பவரை மணந்தார். தண்டபாணிஸ்வாமி தீக்ஷிதர் 1890-ல் திருவையாறு கோபால சாஸ்த்ரிகளிடம் வ்யாகரணம் மற்றும் பூர்வமீமாம்சை கற்றார். திருவையாறு கோபால சாஸ்த்ரிகள் சிதம்பரம் பொன்னம்பலம் பிள்ளை ஸம்ஸ்க்ருத பாடசாலையில் பிரதான பண்டிதராக பணியாற்றினார். கோபால சாஸ்த்ரிகள் பின் புதுக்கோட்டை மஹாராஜா ஸம்ஸ்க்ருத பாடசாலையின் ப்ரதான அத்யாபகராகவும் இருந்தவர்.

இவ்வாறு சாஸ்த்ராத்யயனம் செய்த பின்பு, 1893ஆம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா மூலம் திருநாள் துலாபார மஹோத்வத்தில் விசேஷ ஸன்மானத்தைப் பெற்றார். 1894-ல் திருவல்லிக்கேணியில் வேத வேதாந்த வர்த்தனி ஸபை நடத்திய பரீக்ஷையிலும் தேறி விசேஷ ஸன்மானம் பெற்றார். புதுக்கோட்டை வித்வத் சபையில் திவானாக விளங்கிய ஏ சேஷய்யா சாஸ்த்ரிகள் முன்னிலையில் நடைபெற்ற பரீக்ஷையில் முதல் நிலையில் தேறி வாக்யார்த்தங்கள் செய்தார். அங்கே தொடர்ந்து அத்வைத சம்பந்தமான பல உபன்யாஸங்களைசெய்தார். பரீக்ஷாஅதிகாரியாகவும் வித்வத் ஸபையின் அத்யக்ஷராகவும் விளங்கினார்.

1896ஆம் ஆண்டு கோபால சாஸ்த்ரிகளுக்கு அடுத்து, பொன்னம்பல பாடசாலையின் தலைமை பண்டிதராக நியமிக்கப்பட்டார். 1906-வரை வ்யாகரணம், அலங்காரம் முதலிய சாஸ்த்ரங்களை கற்றுத் தந்தார்.

இச்சமயத்தில் சிதம்பரம் மெ.ச. வித்யாசாலையில் இருந்த திருக்கோஷ்டியூர் ஹரிஹர சாஸ்த்ரிகளிடம் ந்யாய மற்றும் வேதாந்த சாஸ்த்ரங்களைக் கற்றார். மஹாமஹோபாத்யாய ராஜு சாஸ்த்ரிகள் சிதம்பரத்திற்கு விஜயம் செய்த போது இவருடைய வ்யாக்யானத்தை மிகவும் பாராட்டினார். ராமநாதபுரம் ராஜா ஸ்ரீ பாஸ்கர சேதுபதி அவர்களால் நடத்தப்படும் வித்வத் ஸபையில் ஸன்மானமும் தோடாவும் பெற்றார்.

1906-ஆம் ஆண்டு கோபால சாஸ்த்ரிகள் புதுக்கோட்டைக்குச் சென்றார். இவர் அவருடைய இடத்தில் தாம் படித்த ராம.சு வித்யாசாலையின் ப்ரதான பண்டிதராக பொறுப்பேற்றார். இங்கே பல பரீக்ஷைகளுக்குச் செல்லும் வித்யார்த்திகளுக்கு பாடம் கற்பித்தார். இவரிடம் படித்துத் தேறிய மாணவர்கள் பலர். தமது ஓய்வு நேரங்களில் தம் இல்லத்திலேயே பலருக்கு போஜனம் முதலிய வசதிகளை செய்து கொடுத்து எந்த ப்ரதிபலனும் எதிர்பார்க்காமல் ப்ராசீன குருகுல வாசமுறை போல் பாடம் கற்பித்து வந்தார். பல ஆஸ்தீர்களின் த்ரவ்ய ஸஹாயத்தைக் கொண்டு வேதாந்த பாட ப்ரவசனம் செய்தார். ஜஸ்டிஸ் டி வி சேஷகிரி அய்யர் மற்றும் ஸர் சிவசாமி அய்யர் இவரது முயற்சிகளை பெரிதும் பாராட்டினர்.

1911-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த பண்டித ஸதஸில் ஜஸ்டிஸ் ஸர் ஸுப்ரஹ்மண்ய ஐயர் முன்னிலையில், வீ . எஸ் ஸ்ரீநிவாச சாஸ்த்ரிகள், ராவ் பஹாதூர் ரங்காசாரியார் ஆகியோர் உதவியுடன் நடந்தது. இவர் அங்கே அழைக்கப்பட்டார். இவரது அத்வைத விசாரத்திற்காக அனைத்து பண்டிதர்களாலும் இவர் ப்ரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காளஹஸ்தியில் துருவாடா ஸ்ரீ ராகவய்யரால் நடத்தப்பட்ட அத்வைத ஸபையின் வித்வத் ஸதஸ்ஸிலும் இவர் பங்கேற்றார். இது சர். பி எஸ் சிவசாமி அய்யரின் தலைமையில் நடைபெற்றது. இவர் அங்கே ப்ரஹ்மானந்தீயம் நியாயேந்துசேகரம் முதலியவற்றில் வாக்யார்த்தம் செய்து எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றார். இவருக்கு அங்கேயும் தோடாவும் ஸன்மானமும் அளிக்கப்பட்டது. 1916-ஆம் ஆண்டு அரசாங்கம் இவருக்கு மஹாமஹோபாத்யாயர் என்ற பட்டம் அளித்தது. அதே வருடம் டிசம்பர் மாதம், பாரத தர்ம மகா மண்டலத்தார் இவருக்கு “சாஸ்த்ராசார்யா” என்ற விருதும் அளித்தனர்.

இவருடைய சஷ்டியப்த பூர்த்தியின் போது, இவரது தேவதா பக்தி சிரத்தை முதலியவற்றைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்த ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தம்மால் பூஜிக்கப்பட்ட ஒரு மரகத லிங்கத்தை பட்டு பீதாம்பரத்துடன் அனுப்பி வைத்து அதை ஆராதிக்கும் படி ஆசீர்வாதம் செய்து அனுக்ரஹித்தார். இவருக்கு சாஸ்த்ர ரத்நாகர என்ற விருதும் அளிக்கப்பட்டது.

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு பிக்ஷாண்டார் கோவிலுக்கு விஜயம் செய்த பொது அவர் ஸந்நிதானத்தில் ஆனந்தமலாதிகரணத்தில் வாக்யார்த்தம் செய்து பஹுமானிக்கப்பட்டார். திருவாவடுதுறை ஆதீனத்தின் பண்டார ஸந்நிதி அம்பலவாண தேசிகர் அவர்களின் ஆதீன வித்வானாக இருந்தார்.

சென்னை ஸர்வகலா சாலையின் ட்ரஸ்டிகளின் குழுவில் பாகம் வகித்து, அதன் மூலம் ஸம்ஸ்க்ருத பாட நூல் நிர்ணயிக்கும் பணியை பல வருடங்களாகச் செய்தார். அதன் “Board of Studies” உறுப்பினராகவும் பரீக்ஷக ஸமாஜத்திலும் பங்கு வகிக்கிறார். அதன் சிரோமணி பரீக்ஷகர் போர்டில் எட்டு வருடம் பரீக்ஷகராகவும் சில காலம் அத்யக்ஷராகவும் (chairman) பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் நாட்டு பாஷா ப்ராவீண்ய சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். மைசூர் ஸமஸ்தானத்தின் தசராவின் போது நடத்தப்படும் வித்வத் பரீக்ஷையின் பரீக்ஷகராக விளங்கினார்.

சீர்காழிக்கு அருகில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் ஸ்ரீரங்கநாதய்யர் என்ற மிராசுதார் இவரை வேதாந்த சாஸ்த்திரத்தில் ப்ரவசனங்கள் செய்யக் கோரினார். இவருக்கு அத்வைத வேதாந்த சாஸ்த்ரத்தில் விசேஷ அபிமானம் இருந்தாலும் மற்ற மதத்தினரின் கருத்துக்களையும் விசால மனத்துடன் கேட்பார். 1915 ஆம் ஆண்டு உத்தராதி மடத்தால் பெங்களூரில் நடத்தப்பட்ட வித்வத் ஸதஸிற்கு தன் சிஷ்யர்களுடன் சென்று வந்தார்.அதே போல விஸிஷ்டாத்வைத மதமான அஹோபில மடாதிபதிகள் திருப்பனந்தாள் ஆதீனத்திற்கு வருகை தந்த போது இவர் சிறப்பாக சாஸ்த்ரவிசாரம் செய்து பாராட்டப்பட்டார். அதே போல கே.வி. ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்கள் நடத்திய பண்டித பரிஷத்திற்கும் ஆண்டுதோறும் சென்று வருவார்.

காலடியில் சங்கர ஜயந்தியை முன்ன்னிட்டு நடக்கும் அத்வைத ஸபையில் பரீக்ஷகராகவும், நிர்வாக அமைப்பில் உறுப்பினராகவும் இருந்தார்.

இரண்டு மாதம் உத்தர தேச யாத்திரை சென்று அங்குள்ள பண்டிதர்களை சந்தித்தார்.தமது ஆசார்யாளான மஹோமஹாபாத்யாய ஹரிஹர சாஸ்த்ரிகளின் பெயரில் ஸ்ரீ ஹரிஹர வேதாந்த பாடசாலை ஒன்றை துவங்கினார். அங்கே தினந்தோறும், காலை ஒரு மணி நேரம் உபநிஷத் பாஷ்யமும் ப்ரகரணங்களும் கற்றுத் தந்தார்.பல மாணவர்களுக்கு உணவு தங்கும் வசதி போன்றவற்றை தாமே ஏற்பாடு செய்து சாஸ்த்ரத்தை போதித்து வந்தார்.

ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் துவங்கிய ஸ்ரீ மீனாக்ஷி ஸம்ஸ்க்ருத கல்லூரியின் ப்ரதான அத்யாபகராக 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். 1929-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்நிறுவனத்தை சிறப்புற நடத்தினார். இவரிடம் படித்த மாணவர்களுள் மூவர் மாவட்டத்தில் முதலாவதாக தேறி பதக்கம் பெற்றனர். இந்த கல்லூரிக்கு ஒரு முறை அண்ணாமலை பல்கலைக்கழக உபஅத்யக்ஷர். ஸ்ரீநிவாஸ சாஸ்த்ரிகள் இவரைப் பற்றி,

“இந்த ஸ்தாபனத்தைப் பார்த்து மிகவும் மகிழ்கிறேன். தமது பாண்டித்யம் குண விசேஷங்கள் முதலியவை எங்கும் பரவச்செய்யும் இத்தகைய ப்ரதான ஆசிரியரை நியமித்த நம் ராஜா ஸர் அண்ணாமலை செட்டியாரைப் பாராட்ட வேண்டும்” என்றார்.

இவரைப் பற்றி மஹாமஹோபாத்யாய டீ கணபதி சாஸ்த்ரிகள் “சதுஸ் சாஸ்த்ரத்திலும் ஸமர்த்தர்” என்று புகழ்ந்தார். மஹாமஹோபாத்யாய த்ராவிட லக்ஷ்மண சாஸ்த்ரிகள், கல்கத்தா ஸம்ஸ்க்ருத ஸர்வகலாசாலையின் ஸம்ஸ்க்ருத அத்யாபகர் மஹாமஹோபாத்யாய அனந்தகிருஷ்ண சாஸ்த்ரிகள், கங்காநாத ஜா, மஹாமஹோபாத்யாய வித்யா வாசஸ்பதி எஸ். குப்புஸ்வாமி சாஸ்த்ரிகள், ஸர் ஆர் வெங்கடரத்னம் முதலிய பலர் இவர் வகுத்த போதனை முறையையும் மிகவும் பாராட்டி எழுதி உள்ளனர். இவரது ஆச்சாரியாரின் ஆசார்யரான வ்யாகரணம் சுப்பராயாச்சார் இவர் பாடம் நடத்தும் முறையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து இவரை ஆசீர்வதித்தார்.

1929-ஆம் ஆண்டு அண்ணாமலை ஸர்வகலாசாலையின் போதகராக நியமிக்கப் பட்டார். இது தவிர பரீக்ஷகராகவும் போர்ட் உறுப்பினராகவும் இருந்தார்.

பிரமாதி வருஷம்(?) ஆருத்ரா தரிசன மஹோதஸவ சமயத்தில் ஒவ்வொரு வருடமும் தம் இல்லத்தில் ஓர் அத்வைத சபையை நடத்தினார் அங்கே வேதாந்த ப்ரவசனங்கள் நடைபெற்றன அதற்கு அநேக ஆஸ்திகர்கள் உதவினர். இவர் அந்த சபையின் கார்யதர்சியாக இருந்து பல ப்ரதேசங்களிலிருந்து பண்டிதர்களை வரச்செய்து உபன்யாஸங்கள் ஏற்பாடு செய்தார். அவர்கள் தகுதிக்கேற்ப ஸன்மானமும் பிறருடைய உதவியை எதிர்பார்க்காமல் செய்தார். இச்சபைக்கு மஹாமஹோபாத்யாயர்களான பஞ்சாபகேச சாஸ்த்ரிகள், வெங்கடசுப்பா சாஸ்த்ரிகள்,சுப்பராய சாஸ்த்ரிகள், வைத்யநாத சாஸ்த்ரிகள்,கருங்குளம் க்ருஷ்ண சாஸ்த்ரிகள், பேரா. எஸ்.குப்புஸ்வாமி சாஸ்த்ரிகள் போன்ற பெரும் பண்டிதர்கள் வந்துள்ளனர். தன்னுடைய ஆசார்யரான ஹரிஹர சாஸ்த்ரிகளின் விருப்பப்படி ஆத்ம வித்யையான அத்வைத வித்யையை பரவச்செய்வதற்காக பல பணிகளை மேற்கொண்டார்.

ஒரு முறை நடுக்காவேரி ஸ்ரீநிவாஸ சாஸ்த்ரிகள் பெருமுயற்சியால் கிறிஸ்தவ மததுஷ்ப்ரசாரத்திற்கு எதிராக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்தும்படி மன்னார்குடி பெரியவா அழைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியை இவர் மன்னார்குடி பெரியவாளின் சரித்திரம் எழுதிய அவருடைய பேரனிடம் விவரித்ததாக அவர் எழுதுகிறார் ஸ்ரீதண்டபாணி தீக்ஷிதர் தம்முடைய வித்யா குருவால் மட்டுமன்றி தம்முடைய ஆசார்யரான ஹரிஹர சாஸ்திரிகளின் ஆச்சார்யரால் நன்கு பாராட்டப்பெற்றார்.

இது தவிர தீக்ஷிதர்களின் குழந்தைகளுக்கு ஸம்ஸ்க்ருதம், ஸ்ரீநடராஜ மூர்த்தியை ஆராதிக்கத் தேவையான வேதம் , சாஸ்த்ரம் , பூஜா விதானம் முதலியவை போதிப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறார். இதற்காக தேவக்கோட்டை மு.ராம.சுப. ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய செட்டியாருடைய உதவியுடன் ப்ரபவ வருஷம் முதல் “ஸ்ரீ தீக்ஷித சமுதாய பாடசாலை” என்ற ஒன்றைத் துவங்கி அங்கே அத்யாபனமும் செய்தார்.

க்ரந்தங்கள்
1.நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யம்

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமங்களுக்கு ஒரு பாஷ்யம் எழுதினார்.

2.புண்டரீகபுர மாஹாத்ம்யம்

புண்டரீகபுர மாஹாத்ம்யம் என்ற சிதம்பர ஸ்தல மாஹாத்ம்யம் அடங்கிய கிரந்தத்தை இவர் வெளியிட்டுள்ளார்

3.சிதம்பர தத்வ நிர்ணயம்

இவரது பூர்விகரான மீனாட்சிநாத தீக்ஷிதர் சிதம்பரம் நடராஜ பெருமானின் பூஜை வைதீகம் என்பதை பல ப்ராமாணங்களுடன் ஸ்தாபித்து சிதம்பர தத்வ நிர்ணயம் என்ற க்ரந்தத்தை எழுதினார். இந்நூல் தேவக்கோட்டை ஜமீன்தாருடைய உதவியுடன் தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் வெளியிட்டார்.

4.ஸபாபதி விலாஸம்

இது 1933-ஆம் வருடம் திருவிடைமருதூர் அருகில் உள்ள மணலூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த தர்மராஜன் என்பவருடைய குமாரனான வெங்கடேஸ்வரர் என்பவர் இயற்றிய ஸபாபதி விலாஸ நாடகம் முதலிய க்ரந்தங்களையும் இவர் பரிசோதித்து அண்ணாமலை பல்கலைக்கழக ஜர்னலில் (1933-1934) வெளியிட்டிருக்கிறார்.

சிஷ்யர்கள்

ஸர்வகலா சாலைகளில் இவரிடம் படித்தவர்கள் ஏராளமானோர். இது தவிர ஹரிக்கதா காலக்ஷேபத்தில் பெயர்பெற்ற சிதம்பரம் எம்பார் பாகவத சிகாமணி ஸ்ரீரங்காச்சார்யரின் மகனான வேதாந்த சிரோமணி எம்பார் விஜயராகவாச்சார்யார் முதலிய பல வைதிக லௌகீகர்களும் இவரது சிஷ்யர்கள். இவருடைய சிஷ்யர்களுள் ஒருவரான குறிசேரி ஹரிஹர சாஸ்த்ரிகள் இவரைக் குறித்தும் இவரது ஆசார்யரான கோபால சாஸ்த்ரிகளைக் குறித்தும் முறையே வேதசாஸ்த்ர தரங்கிணீ விலாஸம் ஆசார்ய ரத்ன மாலா என்ற இரு காவியங்களை எழுதி பிரசுரித்திருக்கிறார்.

பரமேஸ்வர சாஸ்த்ரிகள் வெங்கடராம சாஸ்த்ரிகள் ஆகிய இருவரும் இவரது சிஷ்யர்கள். அகால மரணம் அடைந்த இவர்கள் இருவரும் வ்யாகரண சாஸ்த்ரத்தில் விசேஷமாக பாண்டித்யம் கொண்டவர்களாக இருந்தனர். ஸ்ரீதண்டபாணி தீக்ஷிதரின் ஷஷ்டியப்தபூர்த்தி சமயத்தில் இவரது சிஷ்யர்களும் ப்ரசிஷ்யர்களும் இவர்மீது பல ஸ்தவமாலைகள் செய்தனர்.

அது தவிர சிதம்பர க்ஷேத்ரத்தின் மீது விசேஷமான ஈடுபாடு கொண்டவர். ஆரம்பம் முதல் வித்யாப்யாஸம், உத்யோக நிமித்தமாக எங்கும் செல்லாமல் அந்த க்ஷேத்ரத்திலேயே இருந்தார். மைசூர் புதுக்கோட்டை, கல்கத்தா, காசி முதலிய இடங்களில் பல பெரிய ஸ்தாபனங்களில் இவரை அழைத்த போதிலும் சிதம்பரத்தை விட்டு வர மனம் ஒப்பாமல் மறுத்து விட்டார்.

தன் எழுபதாவது வயதில் 1943-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அன்று சிதம்பரத்தில் சிவபதம் அடைந்தார். இவரது மறைவை, அடையார் நூலக bulletin இவரது குணாதிசயங்களை இவ்வாறு புகழ்ந்து அஞ்சலி செய்தது :

“With his rushing torrents of arguments, thrusts and parryings in debates, he was a conspicuous personality in all Pandit gatherings and was held in very high esteem for his pious life, dignified bearing, for his modesty which made his presence ever more brilliant, his genial nature, firm convictions and sturdy in-dependence.”